×

புதுச்சேரி அருகே போர்வெல் குட்டையில் மூழ்கி 2 சிறுவர் பலி; நிலத்தின் உரிமையாளர் உள்பட 2 பேர் அதிரடி கைது: பொதுமக்கள் சாலை மறியல்- பரபரப்பு

வானூர்: விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பெரம்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் என்கிற ராமு (33). கொத்தனார். இவரது மனைவி வினிதா (29). இவர்களுக்கு லெவின் (4), லோகித் (3) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். அப்பகுதியில் உள்ள மனைப்பிரிவு ஒன்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும்போது, வெளியேறும் சேறும், தண்ணீரும் கலந்த கலவை வேறு எங்கும் ஓடக்கூடாது என்பதற்காக குட்டை தோண்டி அதில் நிரப்பியுள்ளனர். பணிகள் முடிவடைந்தவுடன் குட்டையை மூடாமல் சென்றுள்ளனர். இதனால் அதில் சுமார் 4 அடிக்கு மேல் சேறும் சகதியும் நிரம்பியிருந்தது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் குட்டை அமைந்துள்ள மனைப்பிரிவில் ராமுவின் 2 குழந்தைகளும் விளையாடியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீர் நிரம்பிய குட்டையில் தவறி விழுந்துள்ளனர். அப்போது சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் மூச்சுத் திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையறிந்து மருத்துவமனைக்கு ஓடிவந்த பெற்றோர்கள், உறவினர்கள் குழந்தைகளின் சடலத்தை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. பின்னர் போலீசார் 2 சிறுவர்களின் உடலையும் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு உறவினர்களிடம் 2 குழந்தைகளின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் 2 சிறுவர்கள் போர்வெல் குட்டையில் மூழ்கி பலியான சம்பவத்தின் நிலத்தின் உரிமையாளரான புதுவை மூலகுளத்தைச் சேர்ந்த மோகன்குமார் (33) மற்றும் அரசின் அனுமதி பெறாமல் போர்வெல் போட்டதாகவும், கவனக்குறையாக பள்ளத்தை மூடாமலும் சென்ற போர்வெல் கம்பெனி உரிமையாளரான விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி அருகே உள்ள அகரத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியபிரபு (37) என்பவரையும் ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து இன்று அதிரடியாக கைது செய்தனர். அவர்களை வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். மேலும் சம்பவ இடத்தை வானூர் தாசில்தார் உமா மகேஸ்வரன், டிஎஸ்பி அருண், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், நரசிம்மன், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது அனுமதியின்றி போர்வேல் போடப்படுவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவெடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் 2 குழந்தைகள் இறந்த ஊரான பெரம்பை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் வில்லியனூர்- புதுச்சேரி 4 முனை ரோடு சந்திப்பில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும், போர்வேல் போட்டுவிட்டு பள்ளத்தை மூடாமல் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அனுமதியின்றி போர்வெல் போடப்படுவதை தடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தகவலின்பேரில் வானூர் ஊராட்சி மன்ற சேர்மன் உஷா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், நரசிம்மன், ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குழந்தை இறப்புக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் ஒருமணி நேரம் நடைபெற்ற மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….

The post புதுச்சேரி அருகே போர்வெல் குட்டையில் மூழ்கி 2 சிறுவர் பலி; நிலத்தின் உரிமையாளர் உள்பட 2 பேர் அதிரடி கைது: பொதுமக்கள் சாலை மறியல்- பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : borewell ,Puducherry ,RAMU ,Suresh ,Viluppuram district ,Vannur Thaluka Perambai ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு