×

இரு அவைகளிலும் லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் நாடாளுமன்றத்தில் எதிரொலித்த ஹிஜாப் விவகாரம்

புதுடெல்லி: கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்த விவகாரத்தை காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் எம்பிக்கள் நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நேற்று ஹிஜாப் விவகாரம் எதிரொலித்தது. மக்களவையில் திரிச்சூர் எம்பி டிஎன் பிரதாபன் கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தை எழுப்பினார். அப்போது பேசிய அவர், ‘‘ஹிஜாப் விவகாரத்தின் காரணமாக இஸ்லாமிய மாணவிகளுக்கு கல்வி மறுக்கப்படுகின்றது. இந்துக்கள் நெற்றியில் பொட்டு வைப்பது போலத்தான் இஸ்லாமியர்கள் ஹிஜாப் அணிந்து கொள்கின்றனர். இந்தியாவில் பன்முகத்தன்மை தேவை’’ என்றார். திரிச்சூர் எம்பியின் இந்த கருத்தின் காரணமாக அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதேபோல் மாநிலங்களவையில் ஹிஜாப் விவகாரத்தை எழுப்பி என்சிபி எம்பி பசியா கான் பேசுகையில், ‘‘இணையதளத்தில் இஸ்லாமிய பெண்கள் ஏலம் விடப்பட்டபோது ஒன்றிய அரசு அமைதி காத்தது. நமது சகோதரத்துவ உணர்வு எங்கே? கர்நாடகாவில் இருக்கும் பெண்கள் என்ன அணியவேண்டும் என்பதை தேர்வு செய்வதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை” என்றார். இந்த விவகாரத்தில் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. முன்னதாக, பிரபல  பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் நேற்று இரங்கல்  தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவை நேற்று காலை கூடியதும், அவை தலைவர் வெங்கய்ய நாயுடு, மறைந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் இரங்கல் தீர்மானத்தை  வாசித்தார். உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மறைந்த  பாடகிக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவை நடவடிக்கைகள் ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் நேற்று மாலை மக்களவை கூடியதும், லதா மங்கேஷ்கர் மறைவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்தார். உறுப்பினர்களின் அஞ்சலிக்கு பிறகு 5மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. * அமித்ஷா கோரிக்கை; நிராகரித்த ஓவைசிஉத்தரப்பிரதேசத்தில் கடந்த வாரம் பிரசாரம் முடித்துவிட்டு டெல்லி திரும்பியபோது ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசியின் கார் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதனை தொடர்ந்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க ஒன்றிய அரசு உத்தரவிட்டது. ஆனால் ஓவைசி மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார். அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘‘துப்பாக்கி சூடு சம்பவத்தில் உடனடி நடவடிக்கையின் காரணமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஓவைசி இசட் பிரிவு பாதுகாப்பை எம்பி அசாதுதீன் ஓவைசி ஏற்க வேண்டும்’’ என்றார். ஆனால் அமித்ஷாவின் கோரிக்கையையும் ஓவைசி நேற்று மறுத்து விட்டார்.* தமிழகத்திற்கு நிலக்கரி குறைவாக தருவது ஏன்? திமுக எம்பி கேள்விமாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் திமுக எம்பி ராஜேஷ்குமார், ‘‘கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்த நிலக்கரி அளவு எவ்வளவு? மாநில தேவையை பூர்த்தி செய்யும் வகையில் முழு அளவும் வழங்கப்பட்டதா? ஒப்புக்கொண்ட அளவை விட குறைவாக தமிழகத்திற்கு நிலக்கரி தரப்படுவது ஏன்?’ என கேள்வி கேட்டார். இதற்கு, ஒன்றிய சுரங்கம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில், ‘தமிழகத்தில் உள்ள சிறு குறு நிறுவனங்களுக்கு நிலக்கரி ஒதுக்குவது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த ஒரு கோரிக்கையும் வரவில்லை என்பதால், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படவில்லை. குறிப்பாக  தமிழக அரசு மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஒன்றிய அரசின் ‘சக்தி’ திட்டம் மூலம் 100 சதவீத நிலக்கரியை  வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நிலக்கரி கொண்டு செல்லுவதில் இடைஞ்சல் இருந்து வந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post இரு அவைகளிலும் லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் நாடாளுமன்றத்தில் எதிரொலித்த ஹிஜாப் விவகாரம் appeared first on Dinakaran.

Tags : Latha Mangeshkar ,Parliament ,New Delhi ,Congress ,
× RELATED லாயக்கில்லாத எம்பிக்களை அனுப்பி...