×

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்கள் 4 பேர் மீது வழக்கு: ஈரோட்டில் பரபரப்பு

ஈரோடு: ஈரோடு மூலப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி 4வது மண்டல அலுவலகத்தில் 34, 38, 39, 40, 41, 42, 44, 45, 46, 51 ஆகிய 10 வார்டுகளில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 63 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (பொறுப்பு) கவுரி, ஒவ்வொரு வார்டு வாரியாக வேட்பு மனுக்கள் அளித்தவர்களை வரவழைத்து, மனுக்களை பரிசீலனை செய்தார். அப்போது, 40வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட பிரபு, 41வது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட சாந்தி, 51வது வார்டில் அதிமுக வேட்பாளர் காஞ்சனா, அவரது மாற்று வேட்பாளர்கள் கலா ஆகியோரின் வேட்பு மனுவை பரிசீலனை செய்து, கோயம்புத்தூர் மாநகராட்சிகள் சட்டம் 1981 பிரிவு 58ல்(3)சி-ன்படி, மாநகராட்சியில் கடை குத்தகைக்கு எடுத்துள்ளதாக கூறி அவர்களது வேட்பு மனுக்களை நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்த 41வது வார்டு வேட்பாளர் சாந்தி, மாற்று வேட்பாளர் பாலாஜி, 51வது வார்டு காஞ்சனா, மாற்று வேட்பாளர் கலா, காஞ்சனாவின் கணவர் பழனிசாமி, 40வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பிரபு ஆகியோர் மண்டல அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர்கள் சாந்தி, காஞ்சனா, இவரது கணவர் பழனிசாமி, கலா, பாலாஜி, சுயேட்சை வேட்பாளர் பிரபு ஆகியோர் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான சிவகுமார் காரினை சிறைபிடித்து முற்றுகையிலும் ஈடுபட்டனர். இதுகுறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள், ஈரோடு தாலுகா போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, சுயேட்சை வேட்பாளர் பிரபு, அதிமுக வேட்பாளர்கள் உட்பட 6 பேர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது, விதிகளை மீறி ஒன்று கூடியது, சர்ச்சைக்குரிய கோஷங்கள் எழுப்பியது உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல், அதிமுக வேட்பாளர்களின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் 40 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.  …

The post வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்கள் 4 பேர் மீது வழக்கு: ஈரோட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : 4 AIADMK ,Riot ,Erode ,Municipal Corporation 4th Zonal Office ,Moolapalayam ,Riot in Erode ,Dinakaran ,
× RELATED கலவர வழக்கில் இம்ரான்கான் விடுதலை