×

தேர்தலில் வாக்களிக்க விரும்பாத குண்டாஸ் கைதிகள்: வேலூர் சிறை அதிகாரிகள் தகவல்

வேலூர்: வேலூர் சிறைகளில் உள்ள குண்டர் சட்ட கைதிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க விரும்பவில்லை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டப்பேரவை, நாடாளுமன்ற, நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தமிழக சிறைகளில் உள்ள தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் யாரும் வாக்களிக்க முடியாது. ஆனால், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் வாக்களிக்க முடியும். அவர்கள் தபால் வாக்கு அளிப்பது வழக்கம்.அந்த வகையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள குண்டர் சட்ட கைதிகளில் வாக்குரிமை செலுத்த விரும்புவோர் பட்டியல் அந்தந்த சிறைத்துறை அதிகாரிகள் மூலம் அந்தந்த மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு, தேர்தல் பிரிவு அலுவலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட கைதியின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பது சரிபார்க்கப்படும். அதன் பின்னர் தகுதியான கைதிகள் தபால் வாக்கு அளிக்க தேர்தல் சிறப்பு அலுவலர்களால் ஏற்பாடு செய்யப்படும்.அதன்படி, வேலூர் ஆண்கள் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் குண்டர் சட்ட கைதிகள் சுமார் 110 பேர் உள்ளனர். இவர்களுக்கு தபால் ஓட்டு வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, குண்டர் சட்ட கைதிகள் யாரும், தபால் ஓட்டு கேட்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தொகுதி விவரங்களை தெரிவிக்கவில்லை. இதனால் வேலூர் சிறைகளில் உள்ள கைதிகள் யாரும் தபால் வாக்களிக்க விருப்பமில்லை என்று வேலூர் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post தேர்தலில் வாக்களிக்க விரும்பாத குண்டாஸ் கைதிகள்: வேலூர் சிறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kundas ,Vellore ,Jail ,Goondas ,
× RELATED கூலி தொழிலாளியிடம் மிரட்டி பணம் பறித்தரவுடி மீது குண்டாஸ்