×

நீர் பிடிப்பு பகுதியில் மூழ்கும் தோட்டங்கள் , குடியிருப்புகள் பேச்சிப்பாறை அணையில் 48 அடி வரை தண்ணீர் தேக்க முடியுமா?

குலசேகரம்:குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் கோதையாறு, பரளியாறு போன்றவை மாவட்டத்தை வளப்படுத்துகிறது. இதில் கோதையாற்றின் குறுக்கே பேச்சிப்பாறையில் 48 அடி நீர்மட்டம் கொண்ட அணை, பரளியாற்றின் குறுக்கே பெருஞ்சாணியில் 77 அடி  நீர்மட்டம் கொண்ட  அணை என இரு பெரும் அணைகள் உள்ளன. இந்த அணைகளிலுள்ள தண்ணீர் மூலம் குமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் தாலுகா போன்றவை பாசன வசதி பெறுகிறது. குமரி மாவட்டத்தில் பாசனத்துக்கு மட்டுமின்றி நிலத்தடி நீர் ஆதாரம், குடிநீர் திட்டங்களுக்கு கை கொடுக்கிறது. இதனால் பேச்சிப்பாறை அணை குமரி மாவட்டத்தின் உயிர்நாடியாக கருதப்படுகிறது.பேச்சிப்பாறை அணை மன்னர்கள் ஆட்சி காலத்தில் நாஞ்சில் நாடு விவசாய தேவைகளை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டது. இதன் பணிகள் 1897 ல் தொடங்கப்பட்டு 1906 ல் முடிவடைந்தது. அப்போது 42 அடி நீர்மட்டம்  கொண்டதாக இருந்தது. இதனை உருவாக்கியதில் ஆங்கிலேய பொறியாளர் ஹம்பிரே அலெக்ஸாண்டர் மிஞ்சின் முக்கிய பங்காற்றினார்.1964 ல் காமராஜர் ஆட்சி காலத்தில் இங்குள்ள நீர் ஆதாரத்தை முழுமையாக பயன்படுத்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 6 அடி உயரம் அதிகரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. 1969ல் இந்த பணிகள் நிறைவடைந்து. 48 அடியாக அணை உயர்த்தப்பட்டது. இதன்மூலம் ராதாபுரம் தாலுகா பகுதிகள் பாசன வசதி பெற்றது. பேச்சிப்பாறை அணை சுமார் 207 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நீர் பிடிப்பு பகுதிகளை கொண்டுள்ளது. இந்த நீர் பிடிப்பு பகுதிகளை சுற்றிலும் பெரும்பாலான இடங்களில் வனபகுதிகள் உள்ளன. நீர் பிடிப்பு பகுதிக்குள் சிறு, சிறு தீவுகள் பல உள்ளன. இந்த தீவுகளுக்கு இடையில் அணையின் சீரோ மட்டத்துக்கு கீழ் சுமார்  60 அடிக்கு அதிகமான பெரும் பள்ளமான பகுதிகள் ஆங்காங்கே உள்ளது.  பெருமழை, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் மலைகள், காடுகளிலிருந்து அடித்து வரப்பட்ட சிறுபாறைகள், மண், மணல், மரத்தடிகள் போன்றவைகளால் இந்த ஆழமான பள்ளங்கள் பெருமளவு நிரம்பியுள்ளது. இதனால் தற்போது மழை காலங்களில் அணை வேகமாக நிரம்பி தண்ணீர் மறுகால் வழியாக வீணாக செல்கிறது.அணை நீர்மட்டம் 42 அடியிலிருந்து 48 அடியாக அதிகரித்த போது ஏராளமான இடங்கள் நீர்பிடிப்பு பகுதியாக மாறியது. இதனால் அந்த பகுதிகளில் வசித்து வந்த பழங்குடியின மக்கள் இடம் பெயர்ந்து பிற பகுதிகளுக்கு சென்று விட்டனர். அணையின் உச்ச நீர்மட்டம் 48 அடியாக இருந்தாலும் மழையின் தாக்கத்தை கணித்து பேரிடர் மேலாண்மையை கவனத்தில் கொண்டு 46 அடிக்குமேல் தண்ணீர் தேக்காமல் மறுகால் வழியாக வெளியேற்றப்படுவது வழக்கம்.மழை நின்ற பின்னர் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டுவதற்குள் பாசனத்திற்காக கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவதால் அணை உச்ச நீர்மட்டமான 48 அடியை எட்டுவது அபூர்வம். இதனால் 48 அடி நீர்மட்டம்   வரும்போது நீர் தேங்கும் இடங்கள் வரையறுக்கப்படாத நிலையுள்ளது. இதனால் நீர் பிடிப்பு பகுதிகளில் ஏராளமான தனியார் தோட்டங்கள் உள்ளன. அதோடு நீர்பிடிப்பு பகுதி வழியாக பழங்குடியின மக்கள் கிராமங்களுக்கு செல்வதற்கு  சாலைகள், சிறுபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானங்கள் நடைபெறும் போது பொதுபணித்துறை உரிய நடைமுறைகள் வகுக்காததால் தண்ணீர் 46 அடியை கடந்ததும் பல இடங்களில் சாலைகள் தண்ணீரில் மூழ்கி விடுகிறது.கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்ததால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகளிலிருந்து பாசனத்துக்கு செல்லும் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டது. பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசனத்துக்கு செல்லும் மெயின் கால்வாயான கோதையாறு இடதுகரை கால்வாயில் குற்றியாணி பகுதியில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பை சீரமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றதால் மழைகாலம் முடிவடைந்த பின்னர் பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் உச்ச நீர்மட்டத்தை நோக்கி சிறிது சிறிதாக உயர்ந்தது. நீர்மட்டம் 47 அடியை தொட்டதும் பேச்சிப்பாறை கடம்பமூடு சந்திப்பிலிருந்து அணையின் நீர்பிடிப்பு பகுதி வழியாக வளையந்தூக்கி, எட்டாங்குன்று, தோட்டமலை போன்ற பழங்குடியின பகுதிகளுக்கு செல்லும் சாலையில் காயல்கரை, உரப்பாறை, ஆண்டிபொற்றை, வளையந்தூக்கி போன்ற பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. உரப்பாறை பகுதியில் 10க்கு மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.  இதனால் அவசர அவசரமாக கால்வாய் உடைப்பு சீரமைக்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டது.அணையை முழுமையாக கண்காணிக்கும் பொதுபணித்துறை, நீர்பிடிப்பு பகுதிகளில் வலம் வரும் வனத்துறை போன்றவை சிறு சிறு நிகழ்வுகளையும் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்கிறது. பழங்குடியினர் நலன் மற்றும் வளர்சி திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்த வளர்ச்சி பணிகள் வனபகுதிகளில் செயல்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இங்கு நடைபெறும் பணிகளின் தன்மைகள் வெளி உலகிற்கு தெரிவதில்லை. இதனால் சரியான திட்டமிடலின்றி சாலைகள் மற்றும் கட்டமைப்பு பணிகள் நடைபெறுகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் சாலை, பாலம் போன்றவை இதேபோன்று  செயல்படுத்தப்பட்டதால் நீர்மட்டம் உயரும் போது அவை தண்ணீரில் மூழ்கி விடுகிறது. இதனை ஆரம்ப நிலையில் கண்காணித்து பொதுப்பணித்துறை, வனத்துறை உரிய வரைமுறைகளை வகுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தற்போது 48 அடி நீர்மட்டம் என்பது கனவாக மாறியுள்ளது. எனவே 48 அடி தேங்கும் வகையில் பொதுபணித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்படும் பழங்குடியின மக்கள் வீடுகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். திட்டங்கள் குறுகிய கண்ணோட்டத்துடன் செய்யாமல் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். 10 சதவிகிதம் தண்ணீர் இழப்பு இதுகுறித்து பாசனத்துறை தலைவர் வின்ஸ்ஆன்றோ கூறுகையில் பேச்சிப்பாறை அணையின் 207 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நீர் பிடிப்பு பகுதி என்பது அணையின் உச்ச நீர்மட்ட அளவீடை பொறுத்தது. இறுதியாக உள்ள 2 அடியில் மொத்தநீர் கொள்ளளவில்  10 சதவிகிதம் உள்ளது. இது குமரி மாவட்டம் மற்றும் ராதாபுரம் தாலுகாவை சேர்ந்த 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாகும். இதனால் முழு கொள்ளளவு என்பதை பேண வேண்டியது நமது கடமையாகும். இதனால் பாதிக்கப்படும் சுமார் 10 க்கு மேற்பட்ட  பழங்குடியின வீடுகளுக்கு அதன் அருகில் பாதிப்பில்லாத இடத்தில் குடியிருப்பு வழங்க வேண்டும். தாழ்வான நிலையிலுள்ள சாலைகளை நீர்மட்டத்துக்கு மேலாக உயரத்தை அதிகரிக்க வேண்டும். இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இதற்கு தனியார் தோட்ட முதலாளிகள் தடையாக உள்ளனர். அவர்களுக்கு உடந்தையாக அதிகாரிகள் பலர் உள்ளனர். இதனை கவனத்தில் கொண்டு அரசு திட்டம் வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.தூர்வார வேண்டும் குலசேகரம் பகுதியிலுள்ள பிரபல  டாக்டர் ஜஸ்டின், தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  குமரி மாவட்டத்தில் உள்ள  நீர்நிலைகளில் பல லட்சம் கன மீட்டர் மண் நிரம்பியுள்ளது. இது கொள்ளளவை வெகுவாக பாதிக்கிறது. நீர்நிலைகளில் நீர் தேக்கம் குறைவதால் பருவமழை பொய்க்கும் காலங்களில் விரைவில் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் பெரிய இழப்புகளை சந்திக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க குமரி மாட்டத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு மணல் தேவை அதிகமாக உள்ளது. இதேபோன்று மாவட்டத்தில் நடைபெறும் நான்குவழி சாலை போன்ற இதர வளர்ச்சி திட்டங்களுக்கு மண் தேவை அதிகம் உள்ளது. மண் கிடைக்காததால் இந்த சாலை பணிகள் வருட கணக்கில் இழுத்து கொண்டு செல்கிறது.எனவே இந்த தேவைகளை கருத்தில் கொண்டு பேச்சிப்பாறை அணை மற்றும் குமரி மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூர் வாரினால் அந்ததந்த பகுதிகளிலுள்ள மண் மற்றும் மணல் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இதனால் தாமதப்பட்டு வரும் நான்குவழி சாலை பணிகள் முடிக்க முடியும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீர்நிலைகளை தூர் வார வேண்டும். இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் தூர் வாருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும் போது அணைகளிலிருந்து எடுக்கப்படும் மண்ணை கொட்ட முடியாத நிலை ஏற்படும். இதனால் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதுடன் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன்  வளர்ச்சி பணிகள் தொய்வின்றி நடைபெறும். இதற்கு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்….

The post நீர் பிடிப்பு பகுதியில் மூழ்கும் தோட்டங்கள் , குடியிருப்புகள் பேச்சிப்பாறை அணையில் 48 அடி வரை தண்ணீர் தேக்க முடியுமா? appeared first on Dinakaran.

Tags : Gothai ,Parliyarai ,West Continuity ,Kumari district ,Gothyad ,
× RELATED சிறுகதையை மையப்படுத்தி உருவாகும் சிற்பி