×

ஆடிப்பெருக்கு முல்லை ஆற்றில் குவிந்த பக்தர்கள்

தேனி, ஆக.4: ஆடி மாதத்தின் 18ம் நாளை ஆடிப்பெருக்கு நாளாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் புதுமண தம்பதியினர் நீர்நிலைகளுக்கு சென்று வழிபட்டு தாலி பெருக்கிக் கொள்வது வழக்கம். இதன்படி, ஆடிப்பெருக்கை முன்னிட்டு தேனி அருகே வீரபாண்டியில் உள்ள முல்லை ஆற்றங்கரையில் நேற்று நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். இறைவனை வேண்டி புதுமண தம்பதியினர் மற்றும் பெண்கள் தாலி பெருக்கி கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து புகழ்பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காலை முதல் திரண்டு அம்மனை வழிபட்டதோடு விளக்கேற்றியும் கூழ் காய்ச்சியும் பக்தர்களுக்கு வழங்கினர். மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் நிர்வாகம் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு கூழ்வார்த்தனர். ஆடிப்பெருக்கையொட்டி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் மற்றும் முல்லை ஆற்றங்கரையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

வருசநாடு: வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட சீல முத்தையாபுரத்தில், சீல முத்தையாசுவாமி கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு திருவிழா நடைபெறும். இதன்படி நேற்று யாகபூஜை விநாயகர் ஹோமம் அன்னதானம், சர்க்கரைப் பொங்கல் வைத்தல், பிடிகாசு கொடுத்தல், சுவாமிக்கு தீப ஆராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி தாமோதரன், தும்மக்குண்டு, வாலிப்பாறை வண்டியூர் சீமுத்தையாபுரம் கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

The post ஆடிப்பெருக்கு முல்லை ஆற்றில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Mullai river ,Aadi ,Perukku ,Theni ,Tamils ,Aadi Perukku day ,Aadi Perukku ,Veerapandi ,Theni… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா