×

45வது சென்னை புத்தகக்காட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் 16ம் தேதி தொடங்கி வைக்கிறார்; 800 அரங்குகள் அமைக்கப்படும்: சங்க நிர்வாகி பேட்டி

சென்னை: தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின்(பபாசி) சார்பில் 45வது சென்னை புத்தக காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் 16ம் தேதி துவக்கி வைக்கிறார். இதுதொடர்பாக தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.கே.முருகன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை புத்தக காட்சியை நடத்துவதற்கு வாய்ப்பு அளித்த முதல்வருக்கு நன்றியை தெரிவிக்கிறோம். அதன்படி, வரும் 16ம்தேதி புதன்கிழமை முதல் புத்தக காட்சி தொடங்கி  மார்ச் 6ம்தேதி வரை 19 நாட்கள் நடக்கிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மூன்றரை லட்சம் சதுர அடி பரப்பளவில் 800 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 500 பதிப்பகங்கள், ஒரு லட்சம் தலைப்புகளின் கீழ் பல கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட இருக்கின்றன. இந்த புத்தகக் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 16ம்தேதி தொடங்கி வைக்க உள்ளார்.மேலும் 2022-ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது, சமஸ்(உரைநடை), பிரசன்னா ராமசாமி(நாடகம்), ஆசைத்தம்பி(கவிதை), அ.வெண்ணிலா(புதினம்), பால் சக்கரியா(பிறமொழி), மீனா கந்தசாமி(ஆங்கிலம்) ஆகிய 6 பேருக்கும், பபாசி சார்பில் சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் விருது, சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன் விருது உள்பட 6 விருதுகளை 6 பேருக்கும் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.பல்வேறு புதினங்கள், புதிய எழுத்தாளர்கள், புதிய நாவல்கள், சரித்திர நாவல்கள் இந்த புத்தக காட்சியில் இடம்பெற உள்ளன. ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக்காட்சி நடைபெறும். குறைந்தபட்சமாக 10 சதவீதம் வரை புத்தகங்களுக்கு தள்ளுபடி அளிக்கப்படும்.இதற்காக பார்வையாளர்களிடம் ₹10 கட்டணமாக வசூலிக்கப்படும். காகிதமில்லா சேவையை கொண்டு வரும் வகையில் www.bapasi.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனிலும் டிக்கெட்டை பெறலாம். தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் விதமாக கடந்த ஆண்டு கீழடியை குறிக்கும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டது. அதேபோல, இந்த ஆண்டும் தொல்லியல் துறை சார்பில் 5 ஆயிரம் சதுர அடியில் தனியாக அரங்கம் அமைக்கப்படுகிறது. அதில் தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் பொருட்கள், புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.இதுதவிர கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு மாணவர்கள், இளைஞர்களுக்கான பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை ஆன்லைனிலும், ஓவியப்போட்டி மட்டும் புத்தக காட்சி நடைபெறும் இடத்திலும் நடக்க இருக்கிறது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு www.bapasi.com என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.   கடந்த ஆண்டு 2 கோடி வரை புத்தகங்கள் விற்பனை ஆகின. இந்த ஆண்டு கூடுதலாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புத்தக காட்சிக்கு வரவேண்டும் என்பதை ஊக்கப்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் டிக்கெட்டுகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, பொருளாளர் குமரன், துணைத்தலைவர் மயிலவேலன், துணை இணைச்செயலாளர் சுப்பிரமணியன், நிர்வாகக்குழு உறுப்பினர் லோகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்….

The post 45வது சென்னை புத்தகக்காட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் 16ம் தேதி தொடங்கி வைக்கிறார்; 800 அரங்குகள் அமைக்கப்படும்: சங்க நிர்வாகி பேட்டி appeared first on Dinakaran.

Tags : 45th Chennai Book Fair ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,South Indian Booksellers and Publishers Association ,PABASI ,Dinakaran ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...