×

மருத்துவ கழிவுகளை நிறுவனங்கள் முறையாக வெளியேற்றா விட்டால் நடவடிக்கை

சிவகங்கை, ஆக.3: மருத்துவ கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள் மேலாண்மை விதிகளை முறையாக பின்பற்றவில்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சுற்றுச்சூழல் வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், மருத்துவ கழிவுகளை முறையாக சேகரித்து, பிரித்து, சுத்திகரித்து, அகற்றுவதற்காக மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016ஐ அறிவிக்கை செய்துள்ளது.

இவ்விதிகளை பின்பற்றுவதன் மூலம், மருத்துவ கழிவுகளின் உற்பத்தியையும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தையும் குறைத்திட இயலும். மேலும், மருத்துவமனைகள், ரத்த வங்கிகள், ஸ்கேன் சென்டர்கள், ரத்தப் பரிசோதனை நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து வெளிவரும் மருத்துவக் கழிவுகள் முறையற்ற வகையில் அப்புறப்படுத்துவதால், சுகாதார, சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது.

மருத்துவக் கழிவுகளை விஞ்ஞான ரீதியாக சுத்திகரித்து அப்புறப்படுத்தும் வழிகளை மருத்துவக்கழிவு மேலாண்மை விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். விதிகளை பின்பற்றாமல் மீறுபவர்கள் மீது சம்மந்தப்பட்ட நிறுவனங்களை மூடி அபராதம் விதிக்கப்படும்.

The post மருத்துவ கழிவுகளை நிறுவனங்கள் முறையாக வெளியேற்றா விட்டால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Ministry of Environment, Forest and Climate Change ,Dinakaran ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...