×

சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் நாளை முதல் மீண்டும் நேரடி விசாரணை: பதிவாளர் ஜெனரல் தனபால் அறிவிப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி வழக்கு விசாரணைக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2020 மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக உயர் நீதிமன்றம் மூடப்பட்டு, அவசர வழக்குகளை மட்டும் நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்து காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நீதிபதிகள், உயர் நீதிமன்றத்துக்கு வந்து வழக்குகளை விசாரித்தனர்.அதன் தொடர்ச்சியாக வழக்கின் தன்மையை பொறுத்தும் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி வாதிட விரும்பும் பட்சத்திலும் நேரடி விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது. வயதில் மூத்த வழக்கறிஞர்கள் தொடர்ந்து காணொலி காட்சி மூலமும் ஆஜராகி வந்தனர். நேரடி விசாரணை முறை, காணொலி காட்சி விசாரணை முறை என கலப்பு விசாரணை முறை அமலில் இருந்து வந்தது.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில், வழக்குகள் நேரடியாக மட்டுமே விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 27ம் தேதி அறிவித்திருந்தது. 21 மாதங்களுக்கு பின் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் நேரடி விசாரணை தொடங்க இருந்த நிலையில், ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக அந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு, காணொலி காட்சி மூலம் மட்டுமே வழக்குகள் விசாரணை நடைபெறும் என்று உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அறிவித்தார்.தற்போது ஒமிக்ரான் தொற்று குறைய தொடங்கியுள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை உள்ளிட்ட தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை முதல் மீண்டும் நேரடி விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், முழுக்க முழுக்க  நேரடி விசாரணையாக இல்லாமல், நேரடி விசாரணை முறை மற்றும்  காணொலி காட்சி விசாரணை முறை என கலப்பு முறையில் நடைபெறும் என்று பதிவாளர் ஜெனரல் தனபால் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.அறிவிப்பாணையில், வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அறைகளை கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க வேண்டும். உணவகங்கள், நூலகங்கள் திறக்க அனுமதி இல்லை. குறிப்பாக, நேரடி விசாரணைக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள், வழக்கில் தானே நேரில் ஆஜராகி வாதிடும் மனுதாரர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது….

The post சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் நாளை முதல் மீண்டும் நேரடி விசாரணை: பதிவாளர் ஜெனரல் தனபால் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,branch ,Chennai High Court ,Registrar General ,Thanapal ,Chennai ,Tamil Nadu ,High Court ,Madurai Branch ,Nanapal ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...