×

அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று (1.8.2025) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏகாம்பரம் பிள்ளை மற்றும் முனுசாமி பிள்ளைத்தெரு திட்டப் பகுதியில் ரூபாய் 40.08 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 240 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுமான பணியையும் , சீனிவாசபுரம் திட்ட பகுதியில் ரூபாய் 42.55 கோடி மதிப்பீட்டில் 396 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்கள்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில் தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கருதி தமிழ்நாடு முதலமைச்சர் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஏகாம்பரம் பிள்ளை மற்றும் முனுசாமி பிள்ளை தெரு திட்டப்பகுதியில் ரூ.40.08 கோடி மதிப்பீட்டில் 240 அடுக்குமாடி குடியிருப்புகள் தரை 4 மற்றும் 5 தளங்களுடன் கட்டப்பட்டு வருகின்றன. இத்திட்டப்பகுதி மறுகட்டுமான திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகின்றது. எனவே மறுகட்டுமான திட்ட பயனாளிகளுக்கு ரூ.1.50 இலட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணியை துரிதப்படுத்தி விரைவில் முடிக்க வேண்டும் என பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் ரூ.42.55 கோடி மதிப்பீட்டில் 396 அடுக்குமாடி குடியிருப்புகள் தூண் மற்றும் 14 தளங்களுடன் கட்டப்பட்டு வருகின்றன. இத்திட்டப்பகுதி அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகின்றது. பயனாளிகள் பங்கு தொகையாக ரூ.6.91 இலட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டப்பகுதி விரைவில் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார். இன்றைய தினம் ஆய்வு செய்யப்பட்ட திட்டப்பகுதிகள் ஒவ்வொன்றும் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, சிறுவர் பூங்கா, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு , தெரு விளக்குகள் மற்றும் தீயணைப்பு வசதிகள் போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி. சிங் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, தலைமை பொறியாளர்கள் வி.எஸ்.கிருஷ்ணசாமி, சு.லால் பகதூர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Mo. Anbarasan ,Chennai ,Micro, Small and Medium Enterprises ,ANBARASAN ,NADU ,URBAN HOUSING DEVELOPMENT BOARD, ,RS ,
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்சமாக...