
நியூயார்க் : இஸ்ரேல், பாலஸ்தீன மோதலுக்கு உடனடியாக தீர்வு காண உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஐநாவின் 3 நாள் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதனை அமெரிக்காவும் இஸ்ரேலும் புறக்கணித்தன. தொடர்ந்து பாலஸ்தீன பிரச்சனைக்கு அமைதியான தீர்வு மற்றும் இரு தனித்தனி நாடுகளே தீர்வு என்ற தலைப்பில் “நியூயார்க் பிரகடனம்” என்ற 25 பக்க ஆவணம் வெளியிடப்பட்டது. அதில் காஸாவை போரை நிறுத்த வேண்டும், காஸாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அனைத்து துணை கைதிகளையும் விடுவித்து ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய இந்தியாவின் ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி, இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு நாடுகள் தீர்வை வரவேற்பதாகவும் அதற்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி தூதரகங்கள் வாயிலாக இருநாட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு உணவு, எரிபொருள் மற்றும் பிற அடிப்படை தேவைகள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
The post இஸ்ரேல், பாலஸ்தீன மோதலுக்கு உடனடியாக தீர்வு காண உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல் appeared first on Dinakaran.
