×

கவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும்: ஆறுதல் தெரிவித்த பின் கனிமொழி எம்.பி. பேட்டி


தூத்துக்குடி: ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் வீட்டுக்கு நேரில் சென்ற அமைச்சர் கே.என். நேரு, திமுக எம்பி கனிமொழி அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். தூத்துக்குடி மாவட்டம், பிரையன்ட் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (27). மென்பொறியாளரான இவர், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கவின் செல்வகணேஷ் தனது பள்ளி தோழியான சித்தா டாக்டர் சுபாஷினி என்பவரை காதலித்து வந்துள்ளார். பள்ளி பருவம் முதல் காதல் என்பதாலும், இருவேறு சமுகத்தினர் என்பதால், சுபாஷினியின் பெற்றோரான எஸ்ஐ தம்பதி சரவணனும், கிருஷ்ணகுமாரியும் (மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் பணியாற்றி வந்தனர்) இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இருந்தாலும் அவர்களின் ஒப்புதலுக்காக பல ஆண்டுகளாக காத்திருந்தனர். இதற்கிடையே, கவின் செல்வகணேஷ் தனது தாத்தாவை சித்தா டாக்டரான காதலி சுபாஷினியிடம் கடந்த 27ம் தேதி திருநெல்வேலிக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சுபாஷினியின் தம்பி சுர்ஜித் (21), கவின் செல்வகணேஷிடம் பேச வேண்டும் என்று தனியாக அழைத்து வந்து, ஆணவக்கொலை செய்யும் நோக்கில் கொடூரமாக கத்தியால் வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த படுகொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து கவின் செல்வகணேஷை படுகொலை செய்த சுர்ஜித்தை கைது செய்தனர்.

மேலும் ஆணவக்கொலைக்கு காரணமான சுபாஷினியின் பெற்றோரும், உதவி ஆய்வாளர்களுமான சரவணனையும், கிருஷ்ணகுமாரியையும் சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி உத்தரவிட்டார். இந்த ஆணவக்கொலை சம்பவத்தால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இரு சமுகத்தினரிடையே மோதல் போக்கு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால், ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் ஆணவக்கொலை வழக்கை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், கவினின் வீட்டுக்கு நேரில் சென்ற திமுக பொருளாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி, அவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் அமைச்சர் கே.என். நேரு சென்றிருந்தார். குற்றம் செய்த அனைவரின் மீதும் நடவடிக்கை எடுப்பதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக கவினின் பெற்றோரிடம் கனிமொழி தெரிவித்தார். மேலும், சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாயாரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கவினின் பெற்றோர் கனிமொழியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கனிமொழி எம்.பி.; பெற்றோர்கள் தங்களது இளம் மகனை பறி கொடுத்துள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம். முதல்வர் சார்பில் பாதிக்கப்பட்ட பெற்றோரை சந்திக்க வந்திருக்கிறோம். நிச்சயமாக அவர்களுக்கு ஒரு நியாயம் கிடைக்கும் சூழலை அரசு உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கையை தர வந்துள்ளோம். மேலும் சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த வழக்கை முதல்வர் சிபிசிஐடிக்கு மாற்றி உள்ளார். நிச்சயமாக யாரையும் பாதுகாக்கும் சூழல் இல்லை. வழக்கில் சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என்று நம்புகிறேன்” என்றும் கூறினார்.

The post கவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும்: ஆறுதல் தெரிவித்த பின் கனிமொழி எம்.பி. பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kavin ,Kanylozhi M. B. ,Thoothukudi ,Minister ,K. N. Nehru ,Dimuka ,Kanimozhi ,Chandrashekar ,Thoothukudi District, Bryant City ,Gavin Selvaganesh ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...