×

திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு; பைனான்சியர் வீட்டில் கொள்ளையடிக்க மலேசியாவில் இருந்து 4 பேர் வரவழைப்பு: 3 பேர் சிக்கினர்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மன்னை ரோட்டை சேர்ந்தவர் கார்த்தி (50). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர், மனைவி பிரியா, மகள்கள் வர்ஷா, தாரா ஆகியோருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சில ஆண்டுகளுக்கு முன் திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையம் அம்மன்கோவில் நகரில் வசித்து வரும் குமார் (எ) குமரன் (40) தோட்ட ேவலை செய்து வந்தார். பின்னர் மலேசியா சென்று ஓட்டலில் வேலை செய்து விட்டு சமீபத்தில் ஊர் திரும்பினார்.

இந்நிலையில் கார்த்தி வீட்டில் கொள்ளையடிக்க குமார் திட்டமிட்டார். இதைதொடர்ந்து மலேசியாவில் வேலை பார்த்தபோது நண்பர்களான மலேசியாவை பூர்வீகமாக கொண்ட சரவணன் (44), இளவரசன் (26), கோபி (30), விமலன் (19) ஆகியோரை கடந்த 13ம் தேதி வரவழைத்து திருச்சியில் குமார் தங்க வைத்தார். பின்னர் கடந்த 26ம் தேதி திருத்துறைப்பூண்டி ராயல் சிட்டியில் தனக்கு தெரிந்த ஒருவர் வீட்டில் 4 பேரையும் தங்க வைத்தார்.இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் கார்த்தி வீட்டுக்கு குமார் உட்பட 5 பேரும் முகமூடி அணிந்தவாறு சென்றனர். அப்ேபாது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு ஆட்கள் நடமாட்டத்தை குமார் பார்த்து கொண்டார். மற்ற 4 பேரும் வீட்டுக்குள் நுழைந்து கார்த்தி மற்றும் அவரது மனைவி, மகள்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை தருமாறு மிரட்டினர்.

இதற்கு மறுத்த கார்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் சத்தமிட்டனர். அதை கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள், கார்த்தி வீட்டை நோக்கி வந்தனர். இதை பார்த்த குமார், விமலன் தப்பியோடி விட்டனர். சரவணன், இளவரசன், கோபி ஆகியோர் பொதுமக்களிடம் சிக்கி கொண்டனர். அவர்களை மடக்கி பிடித்து திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.

அதில், கார்த்தியிடம் அதிகளவில் பணம் உள்ளது. அவரை பிடித்து மிரட்டினாலே பணம், நகைகளை கொடுத்து விடுவார். அவரை கொலை எதுவும் செய்ய வேண்டாம். கார்த்தி வீட்டில் இருந்து பணம், நகையை கொள்ளையடித்தால் செட்டிலாகி விடலாம் என்று மலேசியாவில் இருந்து 4 நண்பர்களையும் குமார் வரவழைத்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு; பைனான்சியர் வீட்டில் கொள்ளையடிக்க மலேசியாவில் இருந்து 4 பேர் வரவழைப்பு: 3 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Redutharapundi ,Malaysia ,Thiruthuraipundi ,Karthi ,Thiruvarur District Thiruthurapundi Mannai Road ,Priya ,Varsha ,Tara ,Ammanko ,Patrapundi Matuppalayam ,Panic ,
× RELATED ஆந்திராவிலிருந்து பொள்ளாச்சிக்கு...