×

தி பிளாஷ் – திரைவிமர்சனம்

டிசி காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்களில் வரிசையில் அடுத்த வரவு பிளாஷ். மின்னலின் ஒளியால் கிடைத்த அற்புத சக்தியால் தி பிளாஷ் மேன் ஒளிக்கு நிகராக வேகமாக ஓடக்கூடிய திறன் கொண்டவர். இவருக்கு இருக்கும் தனிப்பட்ட பவரால் ஒளியின் வேகத்தில் காலதின் ஓட்டத்தில் முன்னோக்கி, பின்னோக்கி செல்லக் கூடிய ஆற்றல் பெற்றவர். தனக்கு இருக்கும் பவரை பயன்படுத்தி நாலு பேருக்கு நல்லது செய்து கொண்டிருக்கும் நேரத்தில் சிறையில் இருக்கும் அப்பாவின் வேண்டுகோள்படி கடந்த காலத்துக்கு சென்று கத்தியால் குத்தப்பட்டு இறந்து போன தாயை காப்பாற்ற முயற்சிக்கிறார்.

கடந்த காலத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில அம்மா பர்சேஸ் பண்ணிக்கொண்டிருக்கும்போது ஒரு ஜாம் டப்பாவை எடுத்து அம்மா பையில் போடுகிறார். இதுதான் அவர் செய்த காரியம். இதனால் ஒட்டுமொத்த உலகின் சரித்திரமே மாறிவிடுகிறது. எல்லா சூப்பர் ஹீரோக்களும் வரலாற்றில் இருந்து மறைந்து போகிறார்கள். வில்லன் ஜெனரல் ஜூட் திரும்பி வருகிறான். செய்த தவறை திருத்தி, சூப்பர் மேன்களுக்கு மீண்டும் உயிர்கொடுத்து ஜூட்டிடமிருந்து உலகத்தை காப்பாற்றவும் வேண்டும். இதனை பிளாஷ் எப்படி செய்து முடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பரபரப்பான, படு ஃபாஸ்ட்டான ஒரு சூப்பர் ஹீரோ படம். காமெடி, ஆக்ஷன், கிராபிக்ஸ் என கலந்துகட்டி அடித்து இரண்டரை மணிநேரம் சீட்டில் கட்டிப்போடுகிறது படம். இடையில் 30 நிமிடங்கள்தான் வசனத்தில் கடக்கும் மீதமுள்ள இரண்டு மணி நேரமும் ராக்கெட் வேகத்தில் பறக்கும், படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசி காட்சி வரை டிசியின் சூப்பர் ஹீரோக்களான பேட் மேன், சூப்பர் மேன், என ஒவ்வொருவரின் என்ட்ரி தியேட்டரையே குலுங்க வைக்கிறது. பேட்மேனுக்கு இதில் கூடுதல் பங்கிருக்கிறது. படம் முழுக்க அவர் பிளாஷூக்கு உதவுகிறவராக வருகிறார்.

அடுத்த இடம் சூப்பர்கேர்ள் சாஷா செலேவுக்கு, அப்பாவியாக அறிமுகமாகி பனிமலை மோதலில் ஆக்ஷன் அதகளம் பண்ணி, பிளாஷூக்கு மறுவாழ்வு கொடுத்து, கடைசியில் வில்லனோடு மோதி தியாகி ஆகும் வரை அவர் வந்து சென்ற காட்சிகள் மனதோடு தங்கி விடுகிறது. பேட்மேன்கள் மைக்கேல் கீட்டன், பென் அப்ளிக் ஆகியோரும் கலக்கி இருக்கிறார்கள். வில்லன் மைக்கேல் சான்மன் கடைசி நேரத்தில் தனது ஆட்டத்தை ஆடுகிறார்.

பிளாஷாக நடித்திக்கும் எஸ்ரா மில்லருக்கு டபுள் டமாக்கா ஆம்… இரண்டு கேரக்டர்களில் நடித்திருக்கிறார், இயல்பான பேரியாகவும், காலமாற்ற குழப்பத்தால் உருவான கேரியாகவும் நடித்திருக்கிறார். டவுள் ஆக்ஷனில் காட்சிக்கு காட்சி மிரட்டல்தான். மமா, ஐடி, இட் சேப்டர் டூ படங்களை இயக்கிய அன்டி முசெர்ட்டி இயக்கி இருக்கிறார். ெஹன்றி பெர்ஹாமின் ஒளிப்பதிவும், பென்ஞ்சமின் வாலிப்சின் பின்னணி இசையும் ஆச்சர்யப்படுத்துகிறது. ஒரு சில ஆஸ்கர் விருதுகளையாவது அள்ளப்போகும் அறிகுறிகள் படத்தில் தெரிகிறது. 3டி அல்லது ஐ மாக்ஸ் தொழில்நுட்பத்தில் பார்த்தால் இரண்டரை மணி நேரம் இன்னொரு உலகத்திற்கு சென்று வரலாம்.

The post தி பிளாஷ் – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : DC Comics' ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்