×

ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச கதை சொல்லல் மாநாடு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு

நாகர்கோவில், ஜூலை 28: தென்னிந்தியாவில் முதல் முறையாக நாகர்கோவில் புதுகிராமம் ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியில் முதல் சர்வதேச கதை சொல்லல் மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. மாநாட்டிற்கு பள்ளி தலைவர் டாக்டர் அருள் கண்ணன் தலைமை வகித்தார். பள்ளி துணைத்தலைவர் டாக்டர் அருள்ஜோதி, பள்ளி இயக்குனர்கள் சாந்தி, சேது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் அருணாச்சலம், இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன ஓய்வு பெற்ற இயக்குனர் டாக்டர் சண்முககுமார், கேந்திரிய வித்யாலயா பள்ளி ஓய்வுபெற்ற முதல்வர் சந்திரசேகர், ஜெர்மன் நாட்டை சேர்ந்த சிறப்பு விருந்தினர் சார்லட், பெர்ரி, ஸ்லோகா ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர். பள்ளி முதல்வர் கெப்சி பாய் வரவேற்றார். பள்ளி டீன் அமெரிக்க பேராசிரியர் டாக்டர் எரிக் மில்லர் கதை சொல்லல் மாநாடு குறித்து துவக்க உரையாற்றினார். டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை டாக்டர் தேவ பிரசாத் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

கதை சொல்லல் மாநாட்டை துவக்கி வைத்து பள்ளி கவுரவத்தலைவர் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஜாண் ஆர்.டி சந்தோஷம் பேசுகையில்: ‘கூட்டு குடும்பமாக வாழ்ந்தபோது நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு கதை சொல்லி மகிழ்விப்பதுடன் இதிகாச கதைகள் உள்ளிட்டவை கூறினர். இதனால் அவர்கள் எதையும் சாதிக்கும் குணம் கொண்டவர்களாக காணப்பட்டனர். தனிகுடித்தனம் நோக்கி சமுதாயம் செல்வதால் கதை சொல்லல், குழந்தைகளுக்கு எட்டா கனியாக உள்ளது. ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளி மேற்கொண்டிருக்கும் கதை சொல்லல் மாநாடு தற்போதைய குழந்தைகளுக்கு ஒரு வரபிரசாதமாக இருப்பதுடன் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளது’ என்றார்.

போட்டியில் வெற்றி பெற்ற பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் ஜேம்ஸ் ஆர் டேனியல் பரிசுகள் வழங்கினார். முடிவில் மாநாடு ஒருங்கிணைப்பாளர் ஏபல் வினோத் ராஜ் நன்றி கூறினார். 2ம் நாள் கருத்தரங்கை கன்னியாகுமரி அரசு மருத்துவகல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஹோலிகிராஸ் கல்லூரி டீன் டாக்டர் ஜெனிபடுவா, விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் டாக்டர் தர்மரஜினி, அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் மஞ்சு, ரோட்டரி முன்னாள் ஆளுநர் ஜெசிந்தா தர்மா, பாடலாசிரியர் திருவரணார் ஜெயராம் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

The post ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச கதை சொல்லல் மாநாடு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : International Storytelling Conference ,Rojavanam International School ,Nagercoil ,South India ,Pudugramam, Nagercoil ,Dr. ,Arul Kannan ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா