×

கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகை கடன் தள்ளுபடி செய்ய துணை பதிவாளர் தலைமையில் குழு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி செய்வது தொடர்பாக தகுதி உள்ளவர்களை அடையாளம் கண்டு, பட்டியல் தயார் செய்ய துணை பதிவாளர் தலைமையில் குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:தமிழக முதல்வர் 13-9-2021 அன்று சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் பொது நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, 5 சவரனுக்கு கீழ் கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் வைத்துள்ளவர்களில் தகுதியுடையவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.இதையடுத்து, போலி நகைகளை வைத்து நகை கடன் பெற்றவர்கள், பல சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்கள் என தகுதியற்றவர்கள் அடையாளம் காணப்பட்டனர். நகை கடன் தள்ளுபடி செய்வது தொடர்பாக தகுதி உள்ள மற்றும் தகுதியற்ற நபர்களை அடையாளம் கண்டு, பட்டியலை தயார் செய்ய ஒரு துணை பதிவாளர் தலைமையில் குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.அரசால் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி பணிகள் முறையாக நடைபெறுகின்றதா என்பதை மண்டல இணை பதிவாளர்கள் உறுதி செய்ய வேண்டும். பொது நகை கடன் தள்ளுபடி பெறுபவர்களில் ஏஏஒய் குடும்ப அட்டை அளித்திருப்பின், சங்க செயலர்கள், வங்கி கிளை மேலாளர்கள் குடும்ப அட்டைதாரரின் பொருளாதார நிலையை ஆய்ந்து, உண்மையிலேயே அவர்கள் வறிய நிலையில் தான் உள்ளனர் என்பதை துணை பதிவாளர் அளவில் உறுதி செய்த பின் தள்ளுபடி வழங்க வேண்டும். இந்த குழு தயாரித்த பட்டியலை அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும். அதன் பின்னர் இணையதளத்தில் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகை கடன் தள்ளுபடி செய்ய துணை பதிவாளர் தலைமையில் குழு: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt. ,CHENNAI ,Shavar ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...