×

சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை..!

சென்னை: சென்னை பெருநகரில் 29.01.2022 முதல் 04.02.2022 வரை கொலை, வழிப்பறி, வங்கி மோசடி போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட 6 குற்றவாளிகள் குண்டர்தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 18 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கொரோனா நோய் பாதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 01.01.2022 முதல் 04.02.2022 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 10 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 6 குற்றவாளிகள், கஞ்சா விற்பனை செய்த 1 குற்றவாளி மற்றும் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த 1 குற்றவாளி என மொத்தம் 18 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 1.முரளிதரன், வ/51, த/பெ.சீனிவாசன், வாழவந்தாள் இல்லம், சாஸ்திரிநகர், கோயம்பேடு, சென்னை, 2.தீபக் (எ) வேலவன் தீபக், வ/43, த/பெ.துரைசுவாமி வேலவன், கோபிநாத் லேஅவுட் வில்லா, கானாத்தூர், சென்னை ஆகிய 2 நபர்கள் போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் பெற்று பணத்தை மோசடி செய்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் வேலவன் தீபக் மீது மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் ஏற்கனவே 2 வழக்குகளும், F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது. 3.கண்ணன், வ/39, த/பெ.மணி, சிவாஜிநகர் 9வது தெரு, தண்டையார்பேட்டை, சென்னை என்பவர் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக J-3 கிண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த, குற்றவாளிகள் முரளிதரன் மற்றும் வேலவன் தீபக் ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளரும், கண்ணன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க J-3 கிண்டி காவல் நிலைய ஆய்வாளரும் பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் மேற்படி 3 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 29.01.2022 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 3 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 4.செல்வகுமார், வ/36, த/பெ.முத்து, ‘H‘ பிளாக், S.M.நகர், நந்தனம், சென்னை என்பவர் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டதற்காக E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான செல்வகுமார் மீது 1 கொலை வழக்கு, 1 கொலை முயற்சி வழக்கு உட்பட சுமார் 7 குற்ற வழக்குகள் உள்ள நிலையில், ஏற்கனவே ஒரு தடவை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 5.தமிழரசன், வ/31, த/பெ.முனிவேல், இந்திராநகர், மீஞ்சூர், திருவள்ளூர் மாவட்டம் என்பவர் 08.12.2022 அன்று சபரிதா என்ற பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக M-3 புழல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மீஞ்சூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான தமிழரசன் மீது 4 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 10 குற்ற வழக்குகள் உள்ள நிலையில், ஏற்கனவே ஒரு தடவை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 6.திவாகர், வ/22, த/பெ.செல்வராஜ், 98வது தெரு, சிட்கோ நகர், வில்லிவாக்கம் என்பவர் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டதால், V-1 வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். V-1 வில்லிவாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான திவாகர் மீது கஞ்சா வழக்கு உட்பட 3 குற்ற வழக்குகள் உள்ளது. மேற்படி குற்றவாளிகளின் குற்றச்செயலை கட்டுப்படுத்த குற்றவாளி செல்வகுமார் என்பவரை குண்டர்  தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரும், குற்றவாளி தமிழரசன் என்பவரை குண்டர்  தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க M-3 புழல் காவல் நிலைய ஆய்வாளரும், திவாகர் என்பவரை குண்டர்  தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க V-1 வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளரும் பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் மேற்படி எதிரிகள் மூவரையும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய 02.02.2022 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி 3 எதிரிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில்  சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 29.01.2022 முதல் 04.02.2022 வரையிலான ஒரு வார காலத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 1 குற்றவாளி, வழிப்பறி மற்றும் அடிதடி குற்றத்தில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் மற்றும் வங்கி மோசடியில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் என மொத்தம் 6 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே சென்னை பெருநகர காவல் குழுவினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், உயிர்காக்கும் மருந்துகள், போதை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கி வைத்து விற்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது….

The post சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை..! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Metropolis ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...