புதுக்கோட்டை, ஜூலை 23: தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கியிருக்க வேண்டும். தேவாலயத்திற்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் வாங்கியிருக்ககூடாது. அவ்வாறு ஒரு தேவாலயத்திற்கு மானியத்தொகை வழங்கிய பின்னர் 5 வருடத்திற்கு அத்தேவாலயம் இம்மானியத் தொகை வேண்டி விண்ணப்பிக்க தகுதியற்றது.மேற்படி திட்டத்தின் கீழ் பின்வரும் கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விபரம்: தேவாலயங்களில் பீடம் கட்டுதல் (கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல் சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் (ம) ஒலிபெருக்கி. நற்கருணை பேழை பீடம்.
திருப்பலிக்குத் தேவையான கதிர் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டான்ட்கள் (ம) பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள். தேவாலயத்திற்கு சுற்றுசுவர் வசதி அமைத்தல் ஆகும்.தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப உயர்த்தப்பட்டுள்ள மானிய தொகை விவரம், 10 முதல் 15 வருடம் வரை ரூ.10 லட்சமும், 15 முதல் 20 வருடம் வரை ரூ.15 லட்சமும், 20 வருடத்திற்கு மேல் இருப்பின் ரூ.20 லட்சமும், தற்போது உயர்த்தி வழங்கப்படும் மானியம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விவரம் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்க்க, புனரமைக்க ரூ.20 லட்சம் வரை மானியம் appeared first on Dinakaran.
