×

திருவெண்ணெய்நல்லூர் அருகே திடீர் தீ விபத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து சேதம்

 

திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 23: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தில் மின் கசிவால் திடீர் தீ விபத்து ஏற்பட்டு 3 கூரை வீடுகள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் தணிகைவேலன்(36) கூலி தொழிலாளி. இவரது கூரை வீடு மின் கசிவு காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் சத்தம் கேட்டு எழுந்து வெளியே ஓடி வந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர். அப்போது தீ மளமளவென பரவி அருகில் இருந்த தர்மலிங்கம் மகன் கூத்தன்(90), மாயவன் மனைவி நீலாவதி(60) ஆகியோரது வீடுகளில் பற்றி எரிந்தது.

இதையடுத்து திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் மூன்று பேரின் கூரை வீட்டில் இருந்த பொருட்கள், பாத்திரங்கள், துணிகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

The post திருவெண்ணெய்நல்லூர் அருகே திடீர் தீ விபத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Thiruvenneynallur ,KARAPATTU ,Arumugam ,Karpatat ,Thiruvenneynallur, Viluppuram District ,Thiruvennainallur ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா