×

‘விடுதலை போரில் தமிழகம்’அலங்கார ஊர்தி கன்னியாகுமரி வருகை: அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் வரவேற்பு

கன்னியாகுமரி: விடுதலை போரில் தமிழகம் அலங்கார ஊர்தி கன்னியாகுமரிக்கு இன்று வந்த நிலையில் அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில்  மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் ‘விடுதலை போரில் தமிழகம்’ என்ற தலைப்பில் 3 அலங்கார ஊர்திகள் இடம்பெறும் என்றும், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை பொதுமக்கள் மற்றும் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள ஏதுவாக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு அந்த அலங்கார ஊர்திகள் மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என்றும் தமிழ்நாடு முதல்வர் அறிவித்தார்.அதன்படி, சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 3 அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு அணிவகுப்பில் பங்கேற்றன. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அவற்றில் ஒரு அலங்கார ஊர்தி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்தது. கன்னியாகுமரி அருகே மகாதானபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் மேளதாம் முழங்க மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன், விஜய்வசந்த் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ ஆஸ்டின், நாகர்கோவில் மாநகர செயலாளர் வக்கீல் மகேஷ், ஒன்றிய செயலாளர்கள் தாமரைபாரதி, வக்கீல் மதியழகன், ஒன்றிய கவுன்சிலர் அழகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், எஸ்.பி பத்ரி நாராயணன் உட்பட அதிகாரிகளும் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். இந்த ஊர்தியின் முகப்பில் தமிழகத்தில் வேலூர் கோட்டையில் 1806 ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுடன் போர் புரிந்த மருது சகோதரர்கள், சிவகங்கையை மீட்ட வீரமங்கை வேலு நாச்சியார், வீரமங்கை வேலுநாச்சியாரின் போர்ப்படையில் பெண்கள் படைக்கு தலைமையேற்று, வெள்ளையர்களின் ஆயுதக் கிடங்கினைத் அழித்து தன்னுயிரைத் தியாகம் செய்த வீராங்கனை குயிலி. பரங்கியரின் ஆதிக்கத்திற்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்ததோடு, ஆங்கிலேயர்களின் ஆட்சியினை எதிர்த்து முதன்முதலில் தீரமாய்ப் போரிட்டுத் தூக்கு கயிற்றினை வீரமுடன் ஏற்றுக்கொண்ட விடுதலைப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரது படையில் தளபதியாக விளங்கிய தூத்துக்குடி மாவட்ட கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கம், அன்னியப் படைகளை தனியாகச் சென்று அழித்த நெற்கட்டும் செவல் பிறப்பிடமாகக் கொண்ட ஒண்டிவீரன், இந்திய விடுதலை வரலாற்றில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக வீர முழக்கமிட்ட நெற்கட்டும் செவல் மாவீரன் பூலித்தேவன், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் கட்டுவதைத் தடுத்த கட்டாலங்குளம் மன்னர் மாவீரன் அழகு முத்துக்கோன், வெள்ளையர்களை எதிர்த்து தீரமாய்ப் போரிட்டு, தூக்கிலிடப்பட்ட, மாவீரர்கள் மருது சகோதரர்கள் உருவாக்கிய காளையார் கோயில் கோபுரம் உள்ளிட்ட பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் உயிரோட்டமாக காட்சி தரும் இந்த ஊர்தி இன்றும், நாளையும் கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் எதிர்புறத்தில் அமைந்துள்ள முக்கோண பூங்கா அருகில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளோடு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது….

The post ‘விடுதலை போரில் தமிழகம்’அலங்கார ஊர்தி கன்னியாகுமரி வருகை: அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Manothankaraj ,Kannyakumari ,Tamil Nadu ,Liberation War ,Ornamental Vorthi ,Liberation War Tamil ,Ornamental Varthi ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி