×

மேலப்பாளையம் தாய் நகரில் 3 மாதமாக எரியாத தெரு விளக்கு

*முட்செடிகள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அச்சம்

நெல்லை : மேலப்பாளையம் தாய்நகரில் 3 மாதங்களாக எரியாத மின்விளக்கை எரிய வைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 51வது வார்டு ரெட்டியார்பட்டி சாலையில் அமைந்துள்ள தாய்நகர் 2வது தெருவில் உள்ள தெரு விளக்கு கடந்த 3 மாதங்களாக எரியவில்லை. இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரத்தில் அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகள், முதியோர்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

தெரு விளக்கு எரியாதது குறித்து மாநகராட்சியின் தெரு விளக்கு புகார் பிரிவுக்கு புகார் செய்யப்பட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இதுசம்பந்தமாக மாநகராட்சியில் கேட்டால் தெரு விளக்கை சுற்றி முட்செடிகள் வளர்ந்துள்ளதால் மின்சார வாரியத்தினர் செடிகளை அப்புறப்படுத்தி பராமரிப்பு செய்து கொடுத்தால் மட்டுமே தெரு விளக்கு பழுது சரி செய்யப்படும் என தெரிவிக்கின்றனர்.

மேலப்பாளையம் மின்சார வாரியத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தபோது, ‘மாநகராட்சி தான் முட்செடிகளை அப்புறப்படுத்த வேண்டும்’ என தெரிவித்து வருகின்றனர். மாநகராட்சியும், மின்வாரியமும் பொதுமக்களை சுற்றி, சுற்றி அலைக்கழித்துக் கொண்டே இருப்பதால் பொதுமக்கள் யாரிடம் முறையிடுவது என தெரியாமல் திண்டாடுகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி சாலை கரீம் நகர் பள்ளிவாசல் அருகே உள்ள ஒரு மரம் மின்கம்பிக்கு இடையூறாக உள்ளது என கிளைகளை வெட்டி பராமரிப்பு செய்யாமல் அந்த மரத்தை மின்வாரியத்தினர் வேரோடு அறுத்து எரிந்துவிட்டனர்.

மின்கம்பி தாழ்வாக செல்கிறது என பொதுமக்கள் புகார் அளித்தும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தாமல் மரத்தை வேரோடு அறுத்து எடுத்துவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

நன்கு வளர்ந்த ஒரு மரத்தை வேரோடு அறுத்து எரித்த மேலப்பாளையம் மின்சார வாரியத்தினர், தற்போது பல மாதங்களாக மின்கம்பத்தை ஒட்டி செல்லும் முட்செடிகளை இதுவரை அகற்றாமல் வேடிக்கை பார்ப்பதால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இன்று பராமரிப்பு பணிக்காக மேலப்பாளையம் பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இன்றாவது மின்சார வாரியத்தினர் மின்பாதைகளுக்கு இடையூறாக இருக்கும் முட்செடிகளை அகற்றி, மாநகராட்சி தெரு விளக்கு பராமரிப்பு மூலம் தெரு விளக்கை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

The post மேலப்பாளையம் தாய் நகரில் 3 மாதமாக எரியாத தெரு விளக்கு appeared first on Dinakaran.

Tags : Melapalayam Thai Nagar ,Nellai ,Electricity Board ,Thai Nagar ,Rediyarpatti Road ,51st ward ,Melapalayam ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...