×

ராமானுஜரின் பணிகளிலேயே தமிழ்மொழி முக்கிய இடம் பெற்றிருந்தது: பிரதமர் மோடி பேச்சு

ஐதராபாத்: ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர ராமானுஜரின் பஞ்சலோக சிலையை திறந்து பிரதமர் மோடி வைத்தார். வைணவ மகான் ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 1,500 டன் ஐம்பொன்னாலான 216 அடி உயர சமத்துவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையில் 120 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. தாமரை மலர் பீடம் மீது ராமானுஜர் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் வகையில் சிலை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராமானுஜருக்கு 200 கிலோ எடையில் தங்க சிலை கற்ப கிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு முன் செயற்கை நீர்வீழ்ச்சி தூண் அமைக்கப்பட்டுள்ளது. தாமரை மலரில் இருந்து ராமானுஜரின் சிலை வருவது போலவும், அதற்கு அபிஷேகம் நடப்பது போலவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சுற்றி 108 திவ்ய தேச பெருமாள் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. 45 ஏக்கரில் சுமார்  ரூ.1000 கோடியில் இவை அமைக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களை சேர்ந்த 2,700 சிற்பிகள் இதில் பங்கேற்றனர். சீனாவில் தயாரிக்கப்பட்ட சமத்துவ ராமானுஜரின் சிலை, 9 மாதமாக 1,600 பாகங்களாக செய்யப்பட்டது. உதிரிபாகங்கள் நம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு 60 சீன நிபுணர்களால் சிலை உருவாக்கப்பட்டது. பருவ நிலை மாற்றத்தை தாங்கி கொண்டு பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் வகையில் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. சிலையை திறந்து வைக்க பிரதமர் மோடி இன்று பிற்பகல் ஐதராபாத் விமான நிலையம் வந்தார். கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலுங்கானா அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மோடியை விமான நிலையத்தில் வரவேற்றனர். ஐதராபாத் விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடி வரவேற்பு நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பங்கேற்கவில்லை. ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர ராமானுஜரின் பஞ்சலோக சிலையை திறந்து பிரதமர் மோடி வைத்தார். பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ள ராமானுஜர் சிலை சமத்துவ சிலை என அழைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பேசிய அவர்; ராமானுஜரின் பணிகளிலேயே தமிழ்மொழி முக்கிய இடம் பெற்றிருந்தது. வசந்த பஞ்சமி நாளில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். ராமானுஜரின் அறிவு உலகுக்கு நல்ல பாதையை காட்ட வேண்டும் என சரஸ்வதியை வேண்டுகிறேன்.  குருவின் மூலமாகத்தான் நாம் அறிவை பெறுகிறோம். இங்கு நடத்தப்படும் யாகங்களின் பலனை, நாட்டின் 130 கோடி மக்களுக்கும் நான் அர்ப்பணிக்கிறேன். ராமானுஜர் வட மொழியில் உரைகள் எழுதியுள்ளார். தமிழ் இலக்கியங்களையும் வளர்த்துள்ளார். ராமானுஜரின் சிலை இந்தியாவின் பெருமையை வருங்கால தலைமுறைக்கு கூறும். உலகம் முழுவதும் உள்ள ராமானுஜரின் சீடர்களுக்கு எனது வணக்கங்கள். ராமானுஜரின் சமத்துவத்திற்கான சிலையை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். ராமானுஜரின் ஆசியால் ஒரே இடத்தில் 108 திவ்ய தேசங்களை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ராமானுஜரின் ஞானம் நமக்கு வழிகாட்டுகிறது என பிரதமர் புகழாரம் சூட்டினார்….

The post ராமானுஜரின் பணிகளிலேயே தமிழ்மொழி முக்கிய இடம் பெற்றிருந்தது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Ramanuja ,Modi ,Hyderabad ,Vaishnava Mahan ,PM ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்