×

இசிஆர் விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

சென்னை : இசிஆர் 6 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டு வரும் பணிகளையும், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் தேர் செல்வதற்கு சாலை அகலப்படுத்தும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விரைவான பயணத்தை உறுதி செய்யும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆறுவழிச் சாலையாக அகலப்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதேபோல், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 14 கிலோ மீட்டர் தொலைவிற்கு உயர்மட்ட மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது.

முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் சென்னை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் உள்ள தேர் செல்வதற்கான வழிகளையும், அங்கு மேற்கொள்ளப்பட உள்ள சாலை விரிவாக்கப் பணிகளையும் அமைச்சர் களஆய்வு செய்தார். கிழக்கு கடற்கரை சாலையில் 2 மீட்டர் அகலத்திற்கு அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் ஆய்வு செய்து, கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் துறை செயலாளர் செல்வராஜ், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் தர், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, நெடுஞ்சாலைத்துறை சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) சந்திரசேகர் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

The post இசிஆர் விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister ,E.V. Velu ,Chennai ,ECR ,Thiruvanmiyur Marundeeswarar ,Temple ,Chennai East Coast Road… ,
× RELATED ஒரு கோடி வாக்குகள் நீக்கம் மோடி அரசின்...