சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரம் – அனுப்பன்குளம் சாலையில் சீனிவாசா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 50 அறைகள் உள்ளன. தீபாவளி பண்டிகைக்கு தேவையான பேன்சி ரக பட்டாசுகள் செய்யும் பணியில் நேற்று 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு அறையில் மருந்து உராய்வு ஏற்பட்டு பயங்கரமாக வெடித்து சிதறியது. தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவி 4 அறைகள் தரைமட்டமாகின. தகவல் அறிந்து சிவகாசி தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதற்குள் சிவகாசி அருகே பள்ளபட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (25), சிவசாமி மனைவி சங்கீதா (43), குருசாமி மனைவி லட்சுமி (45) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மாரியம்மன் (50), நாகலட்சுமி (55) ஆகியோர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம், பலத்த காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
The post சிவகாசி அருகே பயங்கரம் பட்டாசு ஆலை வெடித்து 3 தொழிலாளிகள் கருகி பலி: 2 பெண்கள் படுகாயம் appeared first on Dinakaran.
