×

உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

தர்மபுரி, ஜூலை 19: படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாதம் ஒன்றுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ம், மேல்நிலைக்கல்வி (பிளஸ்2) படித்தவர்களுக்கு ரூ.400ம், பட்டதாரிகளுக்கு ரூ.600ம் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600ம், மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000ம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வரும் செப்டம்பர் 30ம்தேதி முடிவடையும் காலாண்டிற்கு தகுதியுடைய படித்த பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பதிவினை புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவுசெய்து ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும். பட்டியலின பிரிவினருக்கு கடந்த 1ம்தேதி 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்சவரம்பு மற்றும் வருமான உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரியில் நேரடியாக படித்துக் கொண்டிருக்க கூடாது (அஞ்சல் வழியில் படிக்கலாம்). பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் மற்றும் இது போன்ற தொழில்நுட்பப் பட்டம் பெற்றவர்கள் மற்றும் அரசு/தனியார் துறையில் இருந்து எவ்விதமான ஊதியம் பெறும் பணியில் இருந்தவர்கள், இருப்பவர்கள் இந்த உதவித்தொகை பெறத் தகுதியற்றவர்கள். மேலும், தற்போது எந்த துறையின் வாயிலாகவும் உதவித்தொகை பெற்றுக் கொண்டிருக்கக் கூடாது.

இந்த உதவித்தொகை பெற முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய பதிவுதாரர்கள் தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலிருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் வரும் ஆகஸ்ட் 29ம்தேதிக்குள் விண்ணப்பத்தை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அளிக்க வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெற்று மூன்றாண்டு நிறைவுபெறாது சுய உறுதிமொழி ஆவணம் அளிக்காதவர்கள், வரும் ஆகஸ்ட் 29ம்தேதிக்குள் சுய உறுதிமொழி ஆவணத்தை அளித்து தொடர்ந்து உதவித் தொகை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்

The post உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri District ,Collector ,Sathees ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா