×

சென்னை அருகே பனையூரில் கரை ஒதுங்கிய 2 டன் மர்ம பொருள்: போலீசார் விசாரணை

சென்னை:  சென்னை அடுத்த பனையூர் குப்பம், காப்பர் பீச்சில் 10 அடி நீளம், 4 அடி அகலம் உள்ள சுமார் 2 டன் எடை கொண்ட சிகப்பு நிற பெரிய உருளை, சங்கிலியுடன் நேற்று காலை கரை ஒதுங்கியது. அப்போது, மீன் பிடித்துவிட்டு கரை திரும்பிய அப்பகுதி மீனவர்கள், அதை படகில் கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். பின்னர், இதுகுறித்து கானத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த மர்ம பொருளை கைப்பற்றி, பாதுகாப்பாக வைத்தனர். இதனையடுத்து, கடலோர பாதுகாப்பு படைக்கு அவர்கள், அந்த மர்ம பொருளை போட்டோ எடுத்து, வாட்ஸ்அப்பில் அனுப்பினர். அந்த புகைப்படத்தை பார்த்த கடலோர பாதுகாப்பு படையினர், ‘‘இது ஒருவகையான கடல் மிதவை. அவசர காலங்களில் கப்பல்களை பாதுகாப்பாக  நிலைநிறுத்த பயன்படுத்தப்படும் சாதனம். இவ்வழியாக சென்ற ஏதேனும் ஒரு கப்பலில் இருந்து, சங்கிலி தானாக துண்டிக்கப்பட்டு, அலையில் அடித்து வரப்பட்டு, இப்பகுதியில் கரை ஒதுங்கியிருக்கலாம். இந்த மர்ம பொருளால் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை’’ என தெரிவித்தனர். இது தொடர்பாக, கானத்தூர் போலீசார், வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தகவலறிந்த பனையூர் குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டு, அந்த உருளையை ஆர்வமுடன் பார்த்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம்     பரபரப்பு ஏற்பட்டது….

The post சென்னை அருகே பனையூரில் கரை ஒதுங்கிய 2 டன் மர்ம பொருள்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Paniyur ,Chennai ,Paniyur Kubbam ,Copper Beach ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...