×

காட்டுப் பன்றிகளை சுடுவதே நிரந்தரத் தீர்வு; களக்காடு குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

களக்காடு,ஜூலை 18: களக்காடு புலிகள் காப்பக வனத்துறை அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது. திருக்குறுங்குடி வனசரகர் யோகேஸ்வரன் தலைமை வகித்தார். வனவர் மதன் குமார் வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாநில துணை தலைவர் பெரும் படையார் பேசுகையில் ‘‘இந்த கூட்டமானது வெறுமளவில் கண் துடைப்புக்காக நடத்தப்படுவது போல் உள்ளது.

இதில் உயர் அதிகாரிகள் பங்கேற்பதில்லை. விவசாயிகளால் வனப் பகுதிக்கு இடையூறு இல்லை. ஆனால் வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் சேதமடைந்து வருகிறது. விளைநிலங்களை சமன் படுத்த இயந்திரங்கள் கொண்டு செல்வதை வனத்துறையினர் தடுக்கக் கூடாது. காட்டு பன்றிகளை சுடுவோம், குழு அமைத்துள்ளோம் என்றார்கள். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றார்.

சில்கிஸ் சாமுவேல் கூறுகையில் ‘‘விளைநிலங்களை சீர் செய்ய ஜேசிபி இயந்திரம் கொண்டு செல்ல அனுமதி கேட்டு, 1 ஆண்டுகளாக 7 மனுக்கள் கொடுத்துள்ளேன். அனுமதி தருவதற்கு பதில் அங்கு விலை உயர்ந்த மரங்கள் உள்ளதாக பொய்யான தகவலை தருகிறீர்கள். எனது நிலத்தில் ஒரு மரம் கூட கிடையாது. நீங்கள் கூறுவது வடிவேல் பட பாணியில் கிணற்றை காணவில்லை என்பது போல் உள்ளது’ என்றார்.

நகராட்சி கவுன்சிலர் சிம்சோன் துரை பேசுகையில், ‘பன்றிகளை சுட அமைக்கப்படும் குழுவில் உள்ளூர் விவசாயிகளையும் சேர்க்க வேண்டும். மஞ்சுவிளை பச்சையாற்று புதர்களுக்குள் காட்டு பன்றிகள் தஞ்சமடைந்துள்ளன. அவைகளை விரட்ட ஆற்றை தூர் வார வேண்டும்’ என்றார். விவசாயி மணி கூறுகையில் ‘‘எனது நிலத்தில் காட்டுபன்றிகள் நாசம் செய்ததற்கு இழப்பீடு கேட்டு மனு கொடுத்து 4 மாதங்களாகி விட்டது. இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை” என்றார்.

வனச்சரகர் யோ கேஸ்வரன் பேசுகையில் ‘‘காட்டு பன்றிகளை பிடிக்க முதல் கட்டமாக கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் பிடிபடும் பன்றிகள் வேறு இடத்தில் கொண்டு விடப்படும். பயிர் சேத இழப்பீடு 1 மாதத்திற்குள் வந்து விடும்’ என்று பதிலளித்தார். இதனைத்தொடர்ந்து ஏராளமான விவசாயிகள் பேசுகையில் ‘‘காட்டுப் பன்றிகளை பிடிக்க கூண்டு வைப்பதால் எந்தவித பயனும் இல்லை. கூண்டுக்குள் பன்றிகள் சிக்காது. எனவே அவற்றை சுட்டுக் கொல்வதே நிரந்தர தீர்வாக இருக்கும்” என்றார்.

The post காட்டுப் பன்றிகளை சுடுவதே நிரந்தரத் தீர்வு; களக்காடு குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kalakkadu ,Kalakkadu Tiger Reserve Forest Department ,Thirukkurungudi ,Forest Officer ,Yogeswaran ,Forester ,Madan Kumar ,vice president ,Tamil Nadu Farmers’ Association… ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா