×

‘ஸ்மார்ட் சிட்டி குழு’ அமைக்காமல் ரூ.1000 கோடி எப்படி செலவு செய்தீர்கள்? மாநகராட்சிக்கு ராபர்ட் புரூஸ் எம்பி கேள்வி, கலெக்டர் கடும் ‘டோஸ்’

நெல்லை, ஜூலை 18:நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு குழு அமைக்காமல் ரூ.1000 கோடி எப்படி செலவு செய்தீர்கள் என கண்காணிப்புக் குழு கூட்டத்தில் ராபர்ட் புரூஸ் எம்பி கேள்வி எழுப்பினார். பாதாள சாக்கடை பணிகளை நீட்டித்துக் கொண்டே போகிறீர்கள் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் கடும் டோஸ் விட்டார்.

நெல்லை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ராபர்ட் புரூஸ் எம்பி தலைமையில் கலெக்டர் சுகுமார் நடந்தது. கூட்டத்தில் நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான பணிகள் குறித்து கலெக்டர் கேள்வி எழுப்பினார். அதற்கு நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் சந்திரமோகன், 5 சதவீதம் பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. ஸ்மார்ட் போர்டு, கேமரா பொருத்த வேண்டிய பணிகள் உள்ளது, இந்த மாதத்தில் முடித்து விடுவோம் என்றார்.

அதற்கு கேள்வி எழுப்பிய கலெக்டர் இந்த பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பணிகள் மந்தமாக உள்ளது. கேமரா பொருத்துவதற்கு 2 ஆண்டுகள் தேவையா என்றார். மேலும் புதிய குடிநீர் திட்டம் ஏதாவது தயாரித்துள்ளீர்களா. இது தொடர்பாக மாலைக்குள் அறிக்கை தர வேண்டும் என்றார். ராபர்ட் புரூஸ் எம்பி பேசுகையில், தாமிரபரணி திட்டத்திற்கு ரூ.5 கோடி செலவு செய்துள்ளீர்கள். என்ன செலவு செய்தீர்கள். அதற்கான அறிக்கை இதுவரை தரவில்லை. ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்காக குழு அமைக்க வேண்டும் என்று கடந்த இரண்டு கூட்டங்களில் தெரிவித்துள்ளோம். அந்தக் குழு என்ன அமைப்பது என்ன ஆனது? ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு குழுவே அமைக்காமல் ரூ.1000 கோடி எப்படி செலவு செய்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து டென்ஷன் ஆன கலெக்டர், குழு அமைப்பதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம். இது தொடர்பாக மாநகர பொறியாளர் வந்து மாலைக்குள் பதில் சொல்ல வேண்டும். தொடர்ந்து பேசிய கலெக்டர், பாதாள சாக்கடை பணிகளுக்காக போக்குவரத்தை மாற்றிக் கொடுத்துள்ளோம். குடிநீர் வடிகால் வாரியத்திடம் அனுமதி பெற்று தரப்பட்டுள்ளது. எனினும் திட்டத்தை முடிக்காமல் நீட்டித்துக் கொண்டே போகிறீர்கள். டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும். நயினார் குளம் தூய்மைப்படுத்த 50 நாட்கள் கஷ்டப்பட்டுள்ளோம். நீங்கள் திட்டத்தை முடிக்க தாமதமானால் மீண்டும் அங்கு கழிவுகள் சேர்ந்து விடும். மழைக்காலத்திற்குள் திட்டத்தை முடிக்க வேண்டும். நயினார்குளத்தில் படகு சவாரி விட வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்த அதிகாரிகள், பாதாள சாக்கடை திட்டம் – 2ல் 99 சதவீதம் பணிகள் முடிந்து விட்டன. தற்போது வீட்டு இணைப்பு கொடுத்து வருகிறோம். திட்டம் – 3ல் 45 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது என்றனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், செயற்பொறியாளர் செல்வராஜ், பொதுப்பணித் துறை தாமிரபரணி கோட்ட செயற்பொறியாளர் கோவிந்தராஜூ, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ருக்மணி மற்றும் பிடிஓக்கள், தாசில்தார்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

லோ – வோல்டேஜ் குறைபாடு
கூட்டத்தில் ராபர்ட் புரூஸ் எம்பி மேலும் பேசுகையில் ‘‘அரசுத் துறை அதிகாரிகள் நிலுவையில் உள்ள பணிகளை ஓரிரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும். பணிகள் தொடர்பாக கடிதம் எழுதினால் 15 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். மின் வாரியத்தில் குறைந்த மின்னழுத்த புகார் உள்ளது. ரூ.34 கோடி வழங்கியுள்ளோம். குறைபாட்டை போக்க அரசு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். ஸ்வச் பாரத் திட்டத்தில் நிறைய பணம் இருப்பதாக அமைச்சர் என்னிடம் தெரிவித்தார். ஆனால் அதற்கு அதிகாரிகள் எந்த திட்டத்தையும் என்னிடம் தரவில்லை. ஒன்றிய அரசிடம் இருந்து எந்த திட்டம் வேண்டுமென்றாலும் எனக்கு அறிக்கை தாருங்கள். மாவட்ட வளர்ச்சிக்கு நல்ல முறையில் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்’’ என்றார்.

The post ‘ஸ்மார்ட் சிட்டி குழு’ அமைக்காமல் ரூ.1000 கோடி எப்படி செலவு செய்தீர்கள்? மாநகராட்சிக்கு ராபர்ட் புரூஸ் எம்பி கேள்வி, கலெக்டர் கடும் ‘டோஸ்’ appeared first on Dinakaran.

Tags : Smart City Committee ,Robert Bruce ,Nellai ,Smart City ,Nellai Corporation ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா