×

கீழடி அறிக்கையை திருத்த முடியாது; எழுத்துப் பிழையை வேண்டுமானால் திருத்தலாம்: அமர்நாத் ராமகிருஷ்ணன் திட்டவட்டம்!

சிவகங்கை: கீழடி ஆய்வறிக்கையை திருத்த முடியாது என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கீழடி அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் திருத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் அமர்நாத் அளித்த பேட்டியில் கூறியதாவது; எனது கண்டுபிடிப்பை திருத்தினால் நான் குற்றவாளியாகிவிடுவேன். 982 பக்க ஆய்வறிக்கையில் எழுத்துப்பிழையை வேண்டுமானால் திருத்துவேன், உண்மையை திருத்த மாட்டேன். ஆய்வறிக்கையை சமர்பித்தால் மீண்டும் அதில் திருத்தம் செய்ய முடியாது.

கி.மு. 8ம் நூற்றாண்டின் கீழடி நாகரிகத்தை கி.மு. 3ம் நூற்றாண்டு என திருத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது என அமர்நாத் கூறினார். மேலும், கீழடி நாகரிகத்தின் தொன்மையை சிதைக்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபடுவதுபோல் தெரிவதாகவும், ஆய்வின் அடிப்படையில் கீழடி நாகரிக காலத்தை கண்டுபிடித்தேன், அனுமானத்தின் அடிப்படையில் அல்ல எனவும் கூறியுள்ளார்.

கீழடியை பற்றி அறியாத ஒருவர் எப்படி அங்கு ஒன்றுமில்லை என்று கூறமுடியும் என ஸ்ரீராமன் குறித்து அமர்நாத் கருத்து தெரிவித்துள்ளார். கீழடி அகழாய்வு அறிக்கையை அளிக்க தொல்லியல் துறை ஆய்வாளர் ஸ்ரீராமனிடம் ஒன்றிய அரசு அறிக்கை கேட்டிருந்தது. சங்ககால வரலாற்றை பற்றி ஒன்றிய அரசு ஏன் ஆய்வு மேற்கொள்ளவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கீழடி ஆய்வறிக்கையை முதலில் ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவத் படித்துப் பார்க்கட்டும் என கீழடி நாகரிகத்தை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை என்று கூறிய ஷெகாவத்துக்கு அமர்நாத் பதிலடி கொடுத்துள்ளார்.

The post கீழடி அறிக்கையை திருத்த முடியாது; எழுத்துப் பிழையை வேண்டுமானால் திருத்தலாம்: அமர்நாத் ராமகிருஷ்ணன் திட்டவட்டம்! appeared first on Dinakaran.

Tags : Keezhadi ,Amarnath Ramakrishnan ,Sivagangai ,Union Government ,Amarnath ,Dinakaran ,
× RELATED ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு...