தர்மபுரி, ஜூலை 17: ஓமலூரில் இருந்து தர்மபுரி வழியாக ஓசூர் வரை இருவழி ரயில் பாதை திட்டம், அறிவிப்போடு நிற்கும் நிலையில், திட்டப்பணிகளை நிறைவேற்ற வேண்டும் என ரயில்வே பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் தர்மபுரி ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில்நிலையம் வழியாக சேலம் – பெங்களூர், பெங்களூர் – சேலம் மார்க்கமாக பயணிகள் ரயில் மற்றும் 25க்கும் மேற்பட்ட சரக்கு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி 2 ஆயிரம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து தர்மபுரி வழியாக ஓசூர் வரை ஒருவழி ரயில்பாதை உள்ளது. இதனால், அதிக ரயில் இயக்க முடியாத நிலை உள்ளது. மேலும், தர்மபுரியில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் சேவை இல்லாததால், மாவட்டத்தின் வளர்ச்சி பாதிக்கப் பட்டுள்ளது. தர்மபுரியில் ஒருவழி ரயில் பாதை மட்டுமே உள்ளதால், விரைவு ரயில்கள் செல்லும் போது மறு மார்க்கத்தில் வரும் ரயில்கள், ரயில்நிலையங்களில் உள்ள இணைப்பு பாதையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் காலதாமதத்தால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாவது தொடர்கிறது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சேலம் மாவட்டம் ஓமலூர் முதல் தர்மபுரி, தர்மபுரி முதல் ஓசூர் இடையே உள்ள ரயில் பாதையை இருவழி பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ரூ.100 கோடியில் ஓமலூர் முதல் தர்மபுரி, தர்மபுரி முதல் ஓசூர் இடையே ரயில் பாதை இருவழி பாதையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இதுவரை நடக்கவில்லை. சர்வே செய்து நிலம் எடுத்தல், மண் பரிசோதனை செய்தல், சிறுபாலங்கள் அமைக்க இடங்கள் தேர்வு பணிகள் எதுவும் நடக்கவில்லை. அவ்வப்போது, தனி ரயில்களில் அதிகாரிகள் இருவழி ரயில்பாதை அமைக்க சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். ஆனால் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடவில்லை.
தற்போது பெங்களூர் முதல் ஓசூர் வரை, 45 கிலோ மீட்டர் தூரம் இருவழி ரயில்வே பாதை அமைக்கும்பணி நடக்கிறது. இந்தப்பணி இன்னும் ஒரு வருடம் நடக்கும். இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ‘தர்மபுரிக்கு இருவழி ரயில் பாதை மிகவும் அவசியமானது. தர்மபுரி சிப்காட் தொழில்பூங்கா இயங்கும் போது, இந்த இருவழி ரயில்பாதை மிகவும் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். ஆனால் அறிவிப்போடு நிற்கிறது. எனவே, ரயில்வே துறை தர்மபுரி வழியாக இருவழி ரயில்பாதை அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஓசூர் முதல் தர்மபுரி வழியாக ஓமலூர் வரையிலான வழித்தடத்தில் மின்மயமாக்கப்பட்டு, தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், பயண நேரம் குறைந்துள்ளது. கோவை-பெங்களூர் இடையே, வந்தே பாரத் ரயில் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. ஓசூரில் இருந்து தர்மபுரி வழியாக ஓமலூர் வரையுள்ள ரயில் பாதையை இருவழி ரயில் பாதையாக மாற்றுவதற்கு முதல் கட்டமாக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள ரயில் பாதை அருகில் மற்றொரு ரயில் பாதை அமைப்பதற்கு இடம் வரையறை செய்யப்படும். பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்ட பின்பு, எங்கெங்கு மேம்பாலங்கள் வேண்டும் என முடிவு செய்யப்படும்.
அதன் பின்னர், 2வது ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். தற்போது, பெங்களூர் முதல் ஓசூர் வரை 45 கிலோ மீட்டர் தூரம் இருவழி ரயில்வே பாதை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகள் முடிந்த பின்னர், ஓசூர் – தர்மபுரி, தர்மபுரி – ஓமலூர் வரை இருவழி ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் தொடங்கும். தற்போது ஓசூர் முதல் தர்மபுரி வரை ரயில்வே பாதையின் கரைகளை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்த பணிகள் முடிந்த பின்னர், நிலம் எடுப்பு பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post வெற்று அறிவிப்போடு நிற்கும் இருவழி ரயில் பாதை திட்டம் appeared first on Dinakaran.
