×

தகராறை விலக்கிவிட்ட போலீசை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

 

நாகர்கோவில், ஜூலை 17: நாகர்கோவில் கோணம் பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் ஈத்தாமொழியை சேர்ந்த ஒரு மாணவருக்கும், தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்த மற்றொரு மாணவருக்கும் இடையே பள்ளி கழிவறையில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த தெங்கம்புதூரை சேர்ந்த மாணவர், அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் என்ஜிஓ காலனியை சேர்ந்தவரிடம் கூறியுள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து ஈத்தாமொழியை சேர்ந்த மாணவர் பள்ளியின் முன்புற கேட் அருகே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த தெங்கம்புதூரை சேர்ந்த மாணவரும், முன்னாள் மாணவரும் சேர்ந்து ஈத்தாமொழியை சேர்ந்த மாணவரை தாக்கியுள்ளனர்.

அப்போது நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (41), அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளை அழைத்து செல்வதற்காக வந்தார். ராஜேஷ் நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். அவர் சாதாரண உடையில் இருந்துள்ளார்.

தகராறில் ஈடுபட்ட மாணவர்களை ராஜேஷ் தடுத்துள்ளார். அப்போது என்ஜிஓ காலனியை சேர்ந்த முன்னாள் மாணவர், ராஜேசை தாக்கியுள்ளார். இதில் ராஜேசிற்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து ராஜேஷ் ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ராஜேசை தாக்கிய வாலிபர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post தகராறை விலக்கிவிட்ட போலீசை தாக்கிய வாலிபர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Ithamozhi ,Thengambudur ,Konam ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா