×

சங்கரன்கோவில் வீரசிகாமணியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சங்கரன்கோவில், ஜூலை 16: தமிழ்நாடு முதலமைச்சர் ‘‘உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் நடைபெற்ற முகாமில் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், எம்எல்ஏக்கள் ராஜா, சதன் திருமலைக்குமார் ஆகியோர் திட்ட முகாம், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பதிவேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டனர்.

தொடர்ந்து கலெக்டர் தெரிவித்ததாவது,

தென்காசி மாவட்டத்தில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் புளியங்குடி நகராட்சியில் 1,2வார்டுக்கான முகாம் புளியங்குடியிலும், ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் 1-7வார்டுக்கான முகாம் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், ஆலங்குளம் வட்டாரத்திற்கான முகாம் புதுப்பட்டி மெயின் ரோடு ஊராட்சி சமுதாய நலக்கூடத்திலும், வாசுதேவநல்லுார் வட்டாரத்திற்கான முகாம் நெல்கட்டும்செவல் பூலித்தேவர் திருமண மண்டபத்திலும், சங்கரன்கோவில் வட்டாரத்திற்கான முகாம் வீரசிகாமணி சமுதாயநலக்கூடத்திலும், செங்கோட்டை வட்டாரத்திற்கான முகாம் புளியரை சமுதாய நலக்கூடத்திலும் நடைபெற்றது.

இம்முகாமில், ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மாற்றுத்திறன் நலத்துறை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, கால்நடை பராமரிப்பு பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தகவல் தொழில்நுட்பவியல் சேவைகள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை என 15 துறைகள் மூலம் 46 சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு செயலாக்கத்திட்டத்துறை மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இந்த முகாம்களில் மருத்துவ சேவை வழங்கமருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. காவல்துறையினரால் தகவல் உதவிமையும் அமைக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் நேற்று(15ம்தேதி) முதல் 23.10.2025 வரை நகராட்சியில் 48 முகாம்களும், பேரூராட்சியில் 56 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 178 முகாம்களும் என மொத்தம் 282 முகாம்கள் நடைபெறவுள்ளது.

இத்திட்டத்தில் தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம், அங்கு வழங்கப்படவுள்ள சேவைகள் குறித்தும், பொதுமக்களுக்கு தேவையான தகுதிகள், ஆவணங்கள் குறித்தும் தெரிவிப்பார்கள். அரசிடமிருந்து வரப்பெற்றுள்ள கையேடு மற்றும் விண்ணப்பத்தினை வழங்குவார்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் முகாமிற்கு சென்று விண்ணப்பங்களைப் பெற்று அங்கேயே விண்ணப்பிக்க வேண்டும். நகர்ப்புறத்தில் 13 துறைகள் சார்பாக 43 சேவைகளும், ஊரகப்பகுதியில் 15 துறைகள் சார்பில் 46 சேவைகளும் முகாம்களில் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு முடிவு செய்யப்படும். முகாம்களை நடத்திட வட்டார அளவில் 10 பொறுப்பு அலுவலர்களும், பேரூராட்சி, நகராட்சிகளுக்கு 33 பொறுப்பு அலுவலர்களும், வட்ட அளவில் துணைகலெக்டர் நிலையில் 8 கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதிவாழ் மக்கள் அவர்கள் பகுதிகளில் நடைபெறும் முகாமில் மட்டுமே பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இம்முகாமில், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எடிசன், சங்கரன்கோவில் வட்டாட்சியர் பரமசிவம், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

The post சங்கரன்கோவில் வீரசிகாமணியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Stalin ,Sankarankovil ,Veerasikamani ,Tamil Nadu ,Chief Minister ,Chidambaram ,Cuddalore district ,Tenkasi district ,District Collector ,Kamal Kishore ,Raja ,Sadhan Thirumalaikumar… ,Sankarankovil Veerasikamani ,
× RELATED ஓய்வூதியர் தின விழா