- நாமக்கல்
- நவீன் குமார்
- குளத்துக்காடு
- பெரிய மணாலி
- நாமக்கல் மாவட்டம்
- கோயம்புத்தூர்
- தன்வர்த்தினி
- புதூர், ராமாபுரம், நாமக்கல்
நாமக்கல், ஜூலை 16: நாமக்கல் மாவட்டம், பெரியமணலி அருகே குளத்துக்காட்டை சேர்ந்தவர் நவீன்குமார் (29). கோவையில் ஒரு வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜராக வேலை செய்து வரும் இவருக்கும், நாமக்கல் ராமாபுரம் புதூரை சேர்ந்த தன்வர்த்தினிக்கும், கடந்த ஆண்டு ஜூனில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது தன்வர்த்தினி கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆர்டிஓவாக (வருவாய் கோட்டாட்சியர்) பணியாற்றுவதாக அவரது பெற்றோர் கூறினர். ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே, தன்வர்த்தினி ஆர்டிஓ இல்லை என்பதும், அவர் மோசடி செய்து, திருமணம் செய்ததும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த மாதம் தன்வர்த்தினியை கைது செய்து சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தன்வர்த்தினியின் பெற்றோர் மீதும் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி அருகேயுள்ள மாய்க்கினாம்பட்டியில், தன்வர்த்தினி தனது தாயுடன் தங்கியிருந்த வாடகை வீட்டில் இன்ஸ்பெக்டர் சவீதா, எஸ்ஐ முருகன் ஆகியோர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்து லேப்டாப், மெமரிகார்டு, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். லேப்டாப் பாஸ்வேர்டு தெரியாததால் போலீசாரால் அதை திறக்க முடியவில்லை. போலீசார் அவரை நீதிமன்ற காவலில் எடுத்து, 2 நாட்கள் விசாரணை நடத்தினர். அப்போது லேப்டாப்பின் பாஸ்வேர்டை தன்வர்த்தினி போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் லேப்டாப்பை திறந்து பார்த்தனர். அதில் பெரும்பாலான ஆவணங்கள் அழிக்கப்பட்டிருந்தன.
நவீன்குமார் கடந்த மே மாதம், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் உடனடியாக தன்வர்த்தினியை கைது செய்யவில்லை. விசாரணைக்கு வரும்படி அவரை பல முறை போனில் அழைத்தனர். இதனால் அவர் முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் லேப்டாப் மற்றும் செல்போன் வாட்ஸ் அப்பில் இருந்து அழித்து விட்டார். இதையடுத்து ரெகவரி சாப்ட்வேர் மூலம் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் லேப்டாப் மற்றும் செல்போன் வாட்ஸ்அப் மெசேஜ்களை படிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். நீதிமன்ற காவலில் எடுத்து தன்வர்த்தினியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், தன்வர்த்தினி, டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2 தேர்வுகளை எழுதினார். ஆனால் அவர் தேர்ச்சி பெறவில்லை. இருப்பினும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதை போல காட்டி கொள்ள, ஆர்டிஓவாக இருப்பதாக கூறியுள்ளார். இதை பெற்றோரையும் நம்ப வைத்துள்ளார். இதற்காக தன்வர்த்தினி போலியான அரசு பணி நியமன உத்தரவுகள், அடையாள அட்டை போன்றவற்றை தயாரித்து, தன்னை ஆர்டிஓ என மற்றவர்களுக்கு அடையாளப்படுத்தி உள்ளார். இதனால் உறவினர்கள், பெற்றோர், மாப்பிள்ளை வீட்டர் என அனைவரும் நம்பியுள்ளனர். இந்த மோசடியில், தன்வர்த்தினிக்கு உதவியாக இருந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
The post இளம்பெண்ணுக்கு போலி பணி நியமன உத்தரவு தயாரித்து கொடுத்தது யார்? appeared first on Dinakaran.
