×

அரசு திட்டங்களின் பயன்களை மக்கள் பெறும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

கடலூர் : தமிழக அரசு திட்டங்களின் பயன்களை மக்கள் பெறும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சாதிச் சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம், ஆதார், ரேஷன் அட்டையில் திருத்தம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வீடு தேடி வரும் தமிழக அரசு திட்டங்களின் பயன்களை மக்கள் பெறும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, இத்திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கான சிறப்பு முகாம், இன்று முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்கு சென்று தங்கள் விண்ணப்பத்தை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று மாலை 6.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிதம்பரம் புறப்பட்டார். இரவு 9.30 மணிக்கு சிதம்பரம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், கீழ வீதியில் உள்ள தனியார் மஹாலில் தங்கினார். இன்று காலை 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்து மனுதாரர்களுடன் கலந்துரையாடினார். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் முதலமைச்சர் பெற்றார். உங்களுடன் ஸ்டாலின் திட்ட தொடக்க விழாவில் திருமாவளவன், வேல்முருகன் பங்கேற்றுள்ளனர்.

The post அரசு திட்டங்களின் பயன்களை மக்கள் பெறும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Cuddalore ,Chidambaram, Cuddalore district ,Dinakaran ,
× RELATED அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ...