×

கடைசி வரை போராடிய ஜடேஜா 3வது டெஸ்டில் இங்கி. வெற்றி

லண்டன்: இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜடேஜா 61 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றதால் போட்டி கடைசி நொடி வரை விறுப்பாக இருந்தது. இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் அரங்கில் கடந்த 10ம் தேதி துவங்கியது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 387 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பின்னர், முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணியும் 387 ரன்னில் ஆட்டமிழந்தது. அதன் பின் 2ம் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து, 4ம் நாள் ஆட்டத்தின்போது 192 ரன் எடுத்து ஆல் அவுட்டானது.

அதனால், இந்தியா வெற்றி பெறும் நிலை காணப்பட்டது. அதற்கு மாறாக, 4ம் நாள் ஆட்ட நேரம் முடிவதற்குள், இந்தியா 58 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து சொதப்பியது. அதனால், ஆட்டத்தின் போக்கு இங்கிலாந்தின் பக்கம் திரும்பியது. இந்நிலையில், கடைசி நாளான நேற்று, இந்தியா மீண்டும் ஆடத் துவங்கியது. சிறிது நேரத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் ரிஷப் பண்ட் (9 ரன்) ஆட்டமிழந்து அணியை மேலும் சிக்கலுக்கு ஆளாக்கினார்.

அவரைத் தொடர்ந்து நீண்ட நேரம் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்த கே.எல்.ராகுலும் (39 ரன்), ஸ்டோக்ஸ் பந்தில் வீழ்ந்தார். 25வது ஓவரில் ஆர்ச்சர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் தந்து வாஷிங்டன் சுந்தர் ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். 8வது விக்கெட்டுக்கு 30 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் நிதிஷ், வோக்ஸ் பந்தில் அவுட்டானார். அதன் பின், ரவீந்திர ஜடேஜாவும், பும்ராவும் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடியதால், 35 ரன்கள் சேர்ந்தன. அப்போது, ஸ்டோக்ஸ் பந்தில் பும்ரா ஆட்டமிழந்தார். அதன் பின் இணை சேர்ந்த ஜடஜோ – முகம்மது சிராஜ் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர்.

இருப்பினும், இந்தியா 170 ரன் எடுத்திருந்த நிலையில், ஷொயப் பஷீர் வீசிய ஓவரில் முகம்மது சிராஜ் (4 ரன்) கிளீன் போல்டானார். அதனால், இந்தியாவின் 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்ததால், இங்கிலாந்து 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (61 ரன்) கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

The post கடைசி வரை போராடிய ஜடேஜா 3வது டெஸ்டில் இங்கி. வெற்றி appeared first on Dinakaran.

Tags : Jadeja ,England ,London ,India ,England… ,Dinakaran ,
× RELATED இந்த ஆண்டில் ‘கூகுளில்’ அதிகம்...