×

திருமலா பால் நிறுவன மேலாளர் மரணம் தற்கொலைதான்: சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம்

சென்னை: திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது என சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அருண் வேப்பேரியில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொலினேனி மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது மரணம் தற்கொலையா, இல்லையா என சிலர் சந்தேகத்தை கிளப்புகிறார்கள். இதுவரை நடந்த விசாரணையில், அறிவியல் பூர்வமாக பார்க்கும் போது நவீன் பொலினேனி தற்கொலை செய்து கொண்டதாக தான் தெரிகிறது.

சம்பவம் நடந்த இடத்தை தடவியல் நிபுணர்கள், போலீசார் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், நவீன் பொலினேனி கைகள் கட்டப்பட்ட விதம், அவர் அருகில் கிடந்த சிமென்ட் பை ஆகிய ஆதாரங்களை வைத்து, தனது கைகளை தானே பின்னால் கட்டிக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவருகிறது. சிவில், பணம் சம்பந்தப்பட்ட வழக்குகள் என்னுடைய அனுமதி பெற்றுதான் விசாரிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளேன்.

இந்நிலையில், திருமலா பால் நிறுவனத்தில் ரூ.40 கோடி முறை​கேடு நடந்திருப்பதாக மத்திய குற்றப்பிரிவுக்கு புகார் வந்திருக்கிறது. எனது அறிவுறுத்தலை மீறி ரூ.40 கோடி கையாடல் புகாரை துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்துள்ளார். அதனால், துணை ஆணையர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நவீன் பொலினேனியை, துணை ஆணையர் பாண்டியராஜன் இதுவரை மிரட்டியதாக எந்த ஆதாரமும் இல்லை.

மேலும், நவீன் தனது மின்னஞ்சலில் அனுப்பிய கடிதத்தில் கூட காவல் துறை மிரட்டியதாக எதுவும் குறிப்பிடவில்லை.  சம்பவம் நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பே, துணை ஆணையர் பாண்டியராஜனுக்கு நான் தான் விடுமுறை கொடுத்தேன். இந்த வழக்கில் அரசியல் பின்புலம் எதுவும் இல்லை. நிதி மோசடி செய்ததாக மின்னஞ்சலில் அனுப்பிய கடித்தத்தில் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அந்த பணத்தை வைத்து அவர் நிலம் வாங்கியுள்ளார். அதை அனைத்தையும் திருப்பி தருவதாக அவர் கூறும் போது, அவருக்கு மேலும் அழுத்தம் வருகிறது.

அதனால், அவர் வாங்கிய நிலத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னையில் ஏழுக்கிணறு பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடந்த கொலை சம்பந்தமாக சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கும் பொழுது சந்தேகப்படும் நபர்கள் காரில் சென்றதாக தெரிகிறது, அதைத்தொடர்ந்து ஐந்து பேரை கைது செய்து இருக்கிறோம், இதில் ஆந்திர மாநிலத்தில் ஜனசேனா கட்சியில் சேர்ந்த இவர்களுக்கு இந்த முறை முறை பதவிக்கு வாய்ப்பு அளிக்காமல் இருப்பதற்கான காரணமாக கொலை செய்யப்பட்ட நபர் இருந்ததாக குறிப்பிடுகிறது, அந்த காரணத்தினால் அவர் கொலை செய்யப்பட்டதாக தற்போது விசாரணையில் தெரிகிறது,

நுங்கம்பாக்கத்தில் பார் ஒன்றில் நடந்த மோதல் விவகாரம், அடுத்தடுத்து நடந்த விசாரணையில் போதைப் பொருள் வழக்காக மாறி உள்ளது. அது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை மேலும் தொடருகிறது. சென்னையில் இதுவரை 54 போதை பொருள் நெட்வொர்க்குகளை பிடித்திருக்கிறோம்.

இதில் 23 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழக கட்சியினரின் ஆர்ப்பாட்டத்துக்கு நாங்கள் எந்த அனுமதியும் மறுக்கவில்லை. ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி கொடுக்க மாட்டார்கள் என அவர்களாகவே நினைத்துக் கொண்டு சென்றுவிடுகிறார்கள்.

அண்ணா பல்கலை சம்பவத்துக்கு பிறகு பெண்கள் வன்கொடுமை தொடர்பாக புகார் அளிப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, குற்றத்தில் ஈடுபட்டவர், புகார் தாரரை மீண்டும் எந்தவகையில் தொந்தரவு செய்தாலும் அது கடுமையான குற்றமாகும். இதை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post திருமலா பால் நிறுவன மேலாளர் மரணம் தற்கொலைதான்: சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tirumala Milk Company ,Chennai ,Police Commissioner ,Arun ,Vepery ,Chennai Police Commissioner ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் ஆஜர்..!!