×

பாஜகவின் ஒரு பிரிவாக செயல்படும் தேர்தல் ஆணையம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புவனேஸ்வர்: பாஜகவின் ஒரு பிரிவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒரு பக்கம் அங்குள்ள கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மறுபக்கம் வாக்காளர் பட்டியலை சிறப்பு திருத்தம் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்கு ‘இந்தியா’ கூட்டணி சார்பில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வரில் நடைபெற்ற ‘சம்விதான் பச்சாவ் சமவேஷ்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; ஒடிசா பாஜக அரசாங்கம் ஒரே ஒரு வேலையை மட்டுமே செய்கிறது. அது, ஏழை மக்களிடமிருந்து ஒடிசாவின் செல்வத்தைத் திருடுவது. முன்பு பிஜு ஜனதா தள அரசு இதைச் செய்தது. இப்போது பாஜக அரசும் அதையே செய்கிறது. நான் விவசாயிகள், பெண்கள் குழுக்களைச் சந்தித்தேன். அவர்கள் சொல்வதைக் கேட்டேன்.

அவர்களின் வலியையும் துன்பத்தையும் கேட்டேன். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள நீர், காடு, நிலம் ஆகியவை அவர்களுக்குச் சொந்தமானவை. ஆனால், பழங்குடியினர் அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். PESA சட்டம் செயல்படுத்தப்படுவதில்லை. பழங்குடியினருக்கு குத்தகை வழங்கப்படுவதில்லை. காங்கிரஸ் கட்சி PESA சட்டத்தையும் பழங்குடியினர் மசோதாவையும் கொண்டு வந்தது. நாங்கள் இந்தச் சட்டங்களைச் செயல்படுத்தி, பழங்குடியினரின் நிலத்தை மீட்டெடுப்போம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; மகாராஷ்டிரத்தில் தேர்தலில் முறைகேடு செய்யப்பட்டதைப் போல பீகாரிலும் தேர்தல் முறைகேடு மேற்கொள்ள முயற்சி நடக்கிறது.

இதற்காக தேர்தல் ஆணையம் ஒரு புதிய சதித் திட்டத்தை தீட்டியுள்ளது. தேர்தல் ஆணையம் தன்னுடைய வேலையைச் செய்யவில்லை. அது பாஜகவின் ஒரு பிரிவாக செயல்படுகிறது. மகாராஷ்டிரத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 1 கோடி பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லாம் யார், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றி யாருக்கும் தெரியாது. வாக்காளர் பட்டியல் மற்றும் அதுதொடர்பான விடியோவை எங்களுக்கு வழங்குமாறு நாங்கள் பலமுறை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு வருகிறோம்.

ஆனால் தேர்தல் ஆணையம் எங்களுக்கு அதை வழங்க மறுக்கிறது. மகாராஷ்டிரத்தில் செய்யப்பட்ட அதே வேலையை அவர்கள் பிகாரிலும் செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் அப்படிச் செய்ய நாங்கள் ஒருபோதும் விடமாட்டோம் என்று கூறினார்.

The post பாஜகவின் ஒரு பிரிவாக செயல்படும் தேர்தல் ஆணையம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,BJP ,Rahul Gandhi ,Bhubaneswar ,Bihar ,Dinakaran ,
× RELATED அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ...