×

மல்லை சத்யாவின் நடவடிக்கை சரியில்லை; வைகோ குற்றச்சாட்டால் மதிமுகவில் பரபரப்பு

துரோகி பட்டம் கொடுத்து வெளியேற்ற முயற்சி; மல்லை சத்யா

சென்னை: மல்லை சத்யாவின் நடவடிக்கை சரியில்லை என்று வைகோ கூறியுள்ள குற்றச்சாட்டால் மதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் துரோகி பட்டம் கொடுத்து மதிமுகவிலிருந்து வெளியேற்ற முயற்சி நடப்பதாக மல்லை சத்யா அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா இடையே மோதல் ஏற்பட்டு, அதன் எதிரொலியாக மதிமுக முதன்மைச் செயலாளா் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ சமீபத்தில் அறிவித்தார். இதனால் மதிமுகவினர் மத்தியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அதன் பிறகு வைகோ உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் தலையிட்டு, இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். ஆனாலும் இருவருக்குள்ளும் பனிப்போர் அதிகரித்தே வந்தது.

கடந்த சில நாட்களாகவே துரை வைகோ மற்றும் மல்லை சத்யா ஆகிய இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இவ்வாறான சூழ்நிலையில் வைகோ அளித்த பேட்டியில்,‘‘ பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல், எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார், பல போராட்டங்களில் என்னுடன் பங்கேற்றதற்காக, அவர் துரோகம் செய்யவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. அவரது நடவடிக்கை சரியில்லை’’ என்று, வைகோ குறிப்பிட்டிருந்தார். இதனால் மதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது என்றும், விரைவில் மல்லை சத்யா கட்சியிலிருந்து வெளியேறுவார் என்ற தகவல்கள் மதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று வைகோ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மதிமுகவில் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை; கடந்த காலத்தில் செஞ்சி கணேசன் உள்ளிட்டோர் வெளியேறிய போதும் நெருக்கடி ஏற்படவில்லை. யார் கட்சியில் இருந்து வெளியேறினாலும் அது பின்னடைவை ஏற்படுத்தாது. கட்சியில் இருந்து வெளியேறிய நபர்களுடன் தொடர்பில் இருப்பது வருத்தமளிக்கிறது. மல்லை சத்யா போன்று பட்டியலின பிரதிநிதித்துவம் மதிமுகவில் பலருக்கு வழங்கியுள்ளேன். அவர் பல காலம் எனக்கு துணையாக இருந்தார். அதனை நான் எத்தனையோ முறை பல இடங்களில் பெருமையாக பேசி இருக்கிறேன். ஆனால் அண்மையில் அப்படி இல்லை. அவர் மீது வரும் விமர்சனங்கள் தொடர்பாக நிர்வாகக் குழு கூட்டத்தில் பதிவு செய்தேன்’’ என்று கூறினார்.

மல்லை சத்யாவின் மீதான வைகோவின் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மல்லை சத்யா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வைகோ சொன்ன வார்த்தையை தாங்கிக் கொள்ள முடியாது வேதனையில் இருக்கிறேன். நான் மிகவும் காயம்பட்டிருக்கிறேன். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவுக்கு கட்சித் தலைமையை வழங்குவதற்குத் தயாராகி விட்டார். இதுவரை அவரது உயிரை மூன்று முறை காப்பாற்றியிருக்கிறேன். ஆனால், இப்போது வைகோ, தனது மகனுக்காக, எனக்கு துரோகிப் பட்டம் கொடுத்து கட்சியிலிருந்து வெளியேற்றப் பார்க்கிறார் என்றார்.

The post மல்லை சத்யாவின் நடவடிக்கை சரியில்லை; வைகோ குற்றச்சாட்டால் மதிமுகவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Mallya Satya ,Viego ,Malda Satya ,Chennai ,Vigo ,Madhmuga ,Madamuwa ,Mallat Satya ,Dinakaran ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி