×

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஷ்டம்போல் பேசுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது: பொன்முடி வழக்கில் ஐகோர்ட் கருத்து

சென்னை: சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் பி. எஸ்.ராமன், இந்த வழக்கை பொறுத்தவரை முன்னாள் அமைச்சருக்கு எதிரான நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் முடித்து வைக்கப்பட்டு விட்டது என்று தெரி
வித்தார்.

இதைத் தொடர்ந்து புகார் தாரர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல் புகார்தாரர்களிடம் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் புகார்கள் முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன என்று விளக்கம் அளித்தார். அதற்கு நீதிபதி, புகார்தாரர்கள் உயர் அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யட்டும். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கட்டும். மனுதாரர் மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே தங்கள் எல்லை என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள்.

அவர்களின் இதுபோன்ற பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பொன்முடிக்கு எதிரான புகார்களை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தீவிரமாக கருதப்படும். தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

 

The post கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஷ்டம்போல் பேசுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது: பொன்முடி வழக்கில் ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Tags : Ponmudi ,Chennai ,Madras High Court ,minister ,Saiva Vaishnava ,Justice ,Velmurugan… ,Dinakaran ,
× RELATED இறுதி சடங்கு செலவுக்கு பணம்...