×

நழுவும் தாமரை வேட்பாளர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘வாரியத்தை கேட்டவங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறாராமே புல்லட்சாமி’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘புதுச்சேரியில் தேஜ கூட்டணி ஆட்சியமைந்ததும், எம்எல்ஏக்களுக்கு வாரியம் கிடைக்கும் என ஆவலோடு காத்திருந்தார்களாம். நேரத்துக்கு தகுந்த மாதிரி தனித்தனியாக எம்எல்ஏக்கள் அவ்வப்போது புல்லட்சாமி வீட்டின் கதவை தட்டி என்னாச்சு என்று கேட்பது வாடிக்கையாம். அப்போதெல்லாம் பார்க்கலாம் என்ற பதில்தான் வந்ததாம். தனித்தனியா முயற்சி செய்து வெறுத்துப்போன எம்எல்ஏக்கள் கும்பலாக சுத்துவோம் என பாட்டு பாடியவாறு, வாரியத்தை வாங்குவோம் என புல்லட்சாமி வீட்டுக்கு போயி, இன்னைக்கு ரெண்டுல ஒன்ணு கேட்டுவிடுவோம் என காலரை தூக்கி விட்டபடி சென்றார்களாம். என்னப்பா எல்லோரும் ஒன்னாக வந்து உள்ளீர்கள் ஆச்சரியமாக இருக்கிறது என்றாராம். அண்ணே ஒன்னுமில்லை, அந்த வாரியம் மேட்டர் ரொம்ப நாளாக இழுத்துக்கிட்டு இருக்கு.. என கேட்டிருக்கின்றனர். ஓ அதுவா… இப்போதைக்கு இது சம்மந்தமாக வாரதீங்க.. எல்லா வாரியமும் நஷ்டத்துல நட்டுக்கிட்டு இருக்கு, அங்கே போய் என்ன செய்யப்போறீங்க, கூத்தடிக்கவா போறீங்க.. ஒத்தபைசா கூட இல்லாத இடத்துக்கு வாரிய தலைவர் பதவி வேறா என பொரிந்து தள்ளியுள்ளார். வேணும்னா ஒன்னு செய்யுங்க, மத்தியில் உங்க ஆட்சிதான். நிறைய வாங்கிட்டு வாங்க அப்புறமா போட்டுக்கொள்ளலாம் என வந்த பந்தை திருப்பி விட்டிருக்கிறார். எம்எல்ஏக்களாக என்ன சலுகை வேண்டுமோ அதையெல்லாம் செய்றேன். வாரியத்தை விட்டுவிடுங்க என்று வந்த வழியை காட்டியிருக்கிறார். எம்எல்ஏக்களுக்கே வாரியம் இல்லை, இதில் ஆதரவாளர்களுக்கு எப்போது கிடைக்கும். எல்லாம் கனவுதன் மறந்துடுங்க என விரக்தியில் எம்எல்ஏக்கள் புலம்பியிருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல் வரை இப்படிதான் போகும் என அலுத்துக்கொள்கின்றனர் கட்சிக்காரர்கள்’’ என்றார் விக்கியானந்தா.‘‘களமிறங்க தயக்கம் காட்டும் முன்னாள் இலை உறுப்பினர்களை பத்தி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியானது. வெயிலூர் மாவட்டத்துல இலை கட்சி சார்பில் போட்டியிடுபவர்களின் பட்டியலில் கடந்த முறை போட்டியிட்டவர்களின் 20 சதவீதம் பெயர்கள் இல்லையாம். காரணம் குறித்து விசாரித்தால் கடந்த முறை வெற்றி பெற்று சேர்த்த பணத்தை செலவு  செய்தாலும் வெற்றி பெற முடியாது என கருதி வேட்பாளர்கள் பலரும் பின் வாங்கி விட்டார்களாம். கடந்த முறை சாத்து முடியும் ஊருல மெட்ராஸ் படத்தின் காயநாயகன் நண்பனின் பெயர் கொண்டவர் இலை கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி  பெற்றார். ஆனால் இந்த முறை இலை கட்சியில விருப்ப மனு அளிக்கவில்லையாம். இதற்கு காரணம் கடந்த முறை ஆட்சியில் இருந்ததால், எவ்வளவு செலவு செய்தாலும் வெற்றி பெற முடியும் என கருதி ‘ப’ வைட்டமின் செலவு செய்தாராம். தற்போது, ஆட்சியும் இல்லை, செலவு செய்தால் வெற்றி முடியுமா என்ற சந்தேகம்  ஏற்பட்டதாம். இதேபோல், கடந்த முறை இலை கட்சியில போட்டியிட்ட பலரும் தற்போது போட்டியிட தயக்கத்தில் உள்ளனராம். மேலும் 50 சதவீதம் பெண்கள் வார்டுகள் என்பதால் தங்கள் மனைவியை நிற்க வைத்து, கட்சியில இருந்து ‘ப’ வைட்டமின்  கொடுத்தால் செலவு செய்யலாம். இல்லையென்றால் சொந்த பணத்தை செலவு  செய்யக்கூடாது என்ற முடிவில் நிர்வாகிகள் உள்ளதாக இலை கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தாமரை வேட்பாளர்கள் எல்லாம் நழுவுறதா சொல்றாங்களே..’’ ‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இலையின் கூட்டணியில் இருந்து தாமரை விலகி தனியா நிக்குறது எல்லோருக்கும் தெரிஞ்ச கதை. இலைக்கட்சி எல்லா கார்ப்பரேஷனுக்கும் வேட்பாளர்களை அறிவிச்சிட்டாங்க. ஆனால் உண்மையான ஆபோசிட் பார்ட்டியா செயல்படறது நாங்கதான்னு மார்தட்டும் தாமரையால் உடனடியாக வேட்பாளர்களை அறிவிக்க முடியலியாம். இதில் மாங்கனி மாவட்ட கார்ப்பரேஷனில் இதுவரைக்கும், பெரும்பாலான வார்டுகளுக்கு வேட்பாளர்கள் சிக்கலையாம். பட்டியலில் உள்ள வேட்பாளர்களும், எங்களை கேட்காமல் பெயர் வந்திருக்கு என்று மாவட்ட நிர்வாகிகளை மொய்க்க ஆரம்பிச்சிருக்காங்களாம். அவர்களை நலம் விரும்பிகள் தொடர்பு கொண்டு, எப்போது வேட்புமனு தாக்கல் செய்யப்போறீங்கன்னு கேட்டால், பெயர் பட்டியலில் குழப்பம் இருக்கு. அது தீர்ந்தவுடன் வேட்புமனு தாக்கல் செய்வோம் என்று கூறுகிறார்களாம். கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக இருந்து பட்டியலில் இடம் பெற்றவர்களும் இப்படி சொல்வதுதான் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்காம்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘மாநகராட்சியில் ஒரு வார்டாவது கூட்டணி கட்சிக்கு ஒதுக்குங்க என இலை கட்சியிடம் கெஞ்சினார்களாமே..’’‘‘மலைக்கோட்டை மாநகரில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. இதில் அனைத்து வார்டுகளுக்கும் இலைக்கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதாம். இலைக்கட்சி கூட்டணியில் தொடரும் சைக்கிள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மலைக்கோட்டை மாநகரில் 3 வார்டுகள் தங்களுக்கு ஒதுக்கும்படி இலை கட்சி மாவட்ட செயலாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்களாம். ஆனால் இலை கட்சி தலைமை மாநகராட்சி மற்றும்  நகராட்சிகளை தவிர பேரூராட்சிகளில் மட்டும் கூட்டணி கட்சியினருக்கு சீட் ஒதுக்கும்படி கூறியதால் மாவட்ட செயலாளர்கள் சைக்கிள் கட்சிக்கு சீட் வழங்க மறுத்து விட்டார்களாம். கூட்டணி கட்சியில் இருப்பதால் மாநகராட்சியில் ஒரு வார்டாவது தங்களுக்கு ஒதுக்கும்படி சைக்கிள் கட்சி நிர்வாகிகள் கெஞ்சி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. …

The post நழுவும் தாமரை வேட்பாளர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Lotus ,Yananda ,Bullatsamy ,Uncle ,Peter ,Teja Alliance ,Puducherry ,
× RELATED விபத்தில் காவலர் பலி: முதல்வர் இரங்கல்