×

விசாரணையில் கோயில் காவலாளி உயிரிழந்த விவகாரம் போலீஸ் தனிப்படைகள் கலைப்பு: டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு

சென்னை: போலீஸ் காவலில் இருந்த காவலாளி அஜித்குமார் இறந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகள் அனைத்தையும் கலைத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கோயில் முன்பு நிறுத்தப்பட்ட காரில் வைத்திருந்த 10 சவரன் நகையை காணவில்லை என்று போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தினர். மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் காவலாளி அஜித்குமாரை பிடித்துச் சென்று விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையின்போது, கோயில் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் வைத்து அடிக்கும்போது மயங்கிவிழுந்து விட்டதாகவும், பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து தனிப்படை டிஎஸ்பி சண்முகசுந்தரமும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆசீஸ் ராவத், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் அஜித்குமாரிடம் டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை தான் விசாரணை நடத்திய போது அஜித்குமார் இறந்தார். இதனால் தனிப்படை மீது நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், புகார்கள் மீது விசாரணையை, சம்பந்தப்பட்ட காவல்நிலைய விசாரணை அதிகாரிகள் மட்டும் தான் நடத்த வேண்டும். தனியாக தனிப்படைகள் என்று உயர் அதிகாரிகள் ஆலோசனைப்படி அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு தனிப்படையும் விசாரணை நடத்த கூடாது என்று அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், டிஐஜிக்கள், ஐஜிக்கள் மற்றும் அனைத்து காவல் ஆணையர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், மாவட்ட வாரியாக எஸ்பிக்கள் மற்றும் டிஎஸ்பிக்கள் கீழ் அமைக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை உடனே கலைக்க வேண்டும்.

அதேநேரம் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு பிரிவுகளை தவிர்த்து எந்தவிதமான தனிப்படைகளும் இனி காவல்துறையில் செயல்படக்கூடாது. அப்படி உயர் அதிகாரிகள் ஆலோசனையின்றி யாரேனும் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். முக்கிய வழக்குகளில் மட்டும் உயர் அதிகாரிகள் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் படியே சிறப்பு பிரிவு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். டிஜிபியின் உத்தரவை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகள் அனைத்தும் கலைக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post விசாரணையில் கோயில் காவலாளி உயிரிழந்த விவகாரம் போலீஸ் தனிப்படைகள் கலைப்பு: டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DGP ,Shankar Jiwal ,Chennai ,Ajith Kumar ,Tamil Nadu ,Sivaganga district ,Thiruppuvanam… ,special ,
× RELATED அன்புவழி, சகோதரத்துவத்தை பின்பற்றி...