
அகமதாபாத்: கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் நீதிமன்ற விசாரணைகள் ஆன்லைன் மூலமாக நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், சிலர் இந்த ஆன்லைன் விசாரணையின் மாண்பை உணராமல் நடந்துகொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் குஜராத்தில் ஒருவர் கழிவறையில் அமர்ந்தபடியே ஆன்லைன் விசாரணையில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், கடந்த ஜூன் 25ம் தேதி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சந்தீப் பட் முன்னிலையில் நடந்த ஆன்லைன் விசாரணை ஒன்றில், மூத்த வழக்கறிஞர் பாஸ்கர் தன்னா என்பவர் பங்கேற்றார்.
அப்போது அவர், மதுபான வகையான ‘பீர்’ கோப்பை போன்ற ஒன்றில் பானம் அருந்தியபடியும், தொலைபேசியில் பேசியபடியும் விசாரணையில் கலந்துகொண்டார். இந்த அதிர்ச்சியூட்டும் காணொலி சமூக வலைதளங்களில் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். சுபேஹியா மற்றும் ஆர்.டி.வச்சானி ஆகியோர் அடங்கிய அமர்வின் கவனத்திற்கு வந்தது. வழக்கறிஞரின் இந்த நடத்தையை கண்டித்த நீதிபதிகள், ‘இதுபோன்ற செயல்கள் சட்டத்தின் ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்; வழக்கறிஞர் பாஸ்கர் தன்னா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்படுகிறது.
மேலும், அவருக்கு நோட்டீஸ் அனுப்பவும், அவர் ஆன்லைன் விசாரணைகளில் பங்கேற்க தற்காலிகத் தடை விதிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு வழங்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் என்ற அந்தஸ்து திரும்பப் பெறுவது குறித்தும் பரிசீலிக்கப்படும். இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு வரும்’ என்று அறிவித்தனர்.
The post நீதிமன்ற ஆன்லைன் விசாரணையின் போது ‘பீர்’ குடித்த மூத்த வக்கீலுக்கு கடும் கண்டனம்: அவமதிப்பு வழக்கு பதியவும் உத்தரவு appeared first on Dinakaran.
