×

சன் டிவி நிதி உதவி மூலம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பறவைகள், விலங்குகள் கண்காட்சிக் கூடம் திறப்பு

சென்னை: சென்னை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சன் டிவி நிதியுதவி மூலம் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இரவு நேர விலங்குகள் நடமாட்ட கண்காட்சி மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் கூடம் பொதுமக்களின் பார்வைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டன. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவ சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் டிவி பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும் சன் டிவி கடந்தாண்டு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது. இந்த நிதியின் மூலம் பூங்காவில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் nocturnal animal house எனப்படும் இரவு நேர விலங்குகளை கண்டு ரசிக்கும் கண்காட்சி கூடம் அமைக்கப்பட்டது.

இரவு நேர விலங்குகள் நடமாட்டத்தை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளுடன் இந்த கண்காட்சி கூடம் அமைக்கப்பட்டிருந்தது. இதேபோல் வேடந்தாங்கல் வரும் பறவைகளை வண்டலூர் அறிஞர் அண்ணா பூங்காவிலேயே கண்டு ரசிக்கும் வகையிலான பறவைகள் கூடமும் சன் டிவி வழங்கிய நிதியில் அமைக்கப்பட்டன. இந்த கண்காட்சி கூடங்களை சன் டிவி சார்பில் மல்லிகா மாறன், காவேரி கலாநிதி மாறன் மற்றும் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டனர்.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு சன் டிவி அளித்த நிதியின் மூலம், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 6 பேட்டரி வாகனங்கள், 28 பயணிகள் வரை பயணிக்கும் வகையிலான 2 சவாரி வாகனங்களும் வாங்கப்பட்டு, ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏழை எளியோருக்கு கல்வி, அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல், தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக சன் டிவியும் சன் பவுண்டேஷனும் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post சன் டிவி நிதி உதவி மூலம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பறவைகள், விலங்குகள் கண்காட்சிக் கூடம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Bird and animal exhibition ,Vandalur Arignar Anna Zoo ,Sun TV ,Chennai ,Vedanthangal ,Vandalur Arignar ,Anna Zoo ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு...