ஷில்லாங்: மேகாலயா ஹனிமூன் கொலையில் மேலும் ஒருவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவரிடம் 119 முறை சோனம் செல்போனில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த இளம் தொழில் அதிபர் ராஜா ரகுவன்ஷி, அவரது புதிய மனைவி சோனம் ஆகியோர் மே 23ஆம் தேதி மேகாலயா மாநிலம் சிரபுஞ்சி பகுதிக்கு சுற்றுலா சென்ற போது ராஜா படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக சோனம், அவரது காதலன் என்று கூறப்படும் ராஜ் குஷ்வாகா, கூலிப்படையை சேர்ந்த விஷால் சவுகான், ஆகாஷ் ராஜ்புத் மற்றும் ஆனந்த் குர்மி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் வாக்குமூலம் பெற்ற மேகாலயா போலீசார் கொலை நடந்த சிரபுஞ்சிக்கு அழைத்துச்சென்று, கொலையை நடித்துக்காட்ட சொல்லி வீடியோ பதிவு செய்து கொண்டனர். இதற்கிடையே மேகாலயா சிறப்பு படை போலீசாரின் ஒரு பிரிவினர் மீண்டும் மபி மாநிலம் இந்தூர் சென்றுள்ளனர். இந்த கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அது பற்றி விசாரிக்க இந்தூருக்கு போலீசார் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் சோனம் தனது செல்போனில் இருந்து சஞ்சய் வர்மா என்ற நபருக்கு 119 முறை தொடர்பு கொண்டு பேசியிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராஜா ரகுவன்ஷியுடன் திருமணத்திற்கு முன்பும், பின்பும் சோனமும், சஞ்சய் வர்மாவும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளனர். மார்ச் 1 முதல் மார்ச் 25 வரை கிடைத்த சோனத்தின் செல்போன் அழைப்புகள் அடிப்படையில் சோனமும், சஞ்சயும் 119 முறை பேசியுள்ளது பதிவாகி உள்ளது. இதையடுத்து சஞ்சய் வர்மாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அந்த எண் தற்போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தூருக்கு சென்றுள்ள போலீசார் சஞ்சய் வர்மா பற்றி விசாரித்து வருகிறார்கள். இது ராஜா கொலை வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே ஹனிமூனுக்கு ராஜா ரகுவன்ஷி கொண்டு சென்ற செல்போனை சோனம் உடைத்து வீசியுள்ளார். அதே சமயம் சோனம் கொண்டு சென்ற 2 செல்போன்கள் இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை. அந்த செல்போன்கள் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் கொலை செய்யப்பட்ட ராஜா ரகுவன்ஷியின் நகைகள் இன்னும் மீட்கப்படவில்லை. மேகாலயா டிஜிபி இடஷிஷா நோங்ராங் கூறுகையில்,’ ராஜா ரகுவன்ஷியின் நகைகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக சோனம் தெரிவித்தார்’ என்றார். எனவே அந்த நகைகள் சஞ்சய் வர்மா வசம் இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.
* சோனம் சகோதரரிடம் மீண்டும் விசாரணை
ராஜா ரகுவன்ஷியின் கொலை தொடர்பாக சோனம் சகோதரர் கோவிந்த்திடம் மீண்டும் விசாரணை நடத்த மேகாலயா போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக ஷில்லாங் வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதை அவர் ஏற்றுள்ளார். அவர்கள் அழைக்கும் தேதியில் மேகாலயா வருவதாக அவர் உறுதி அளித்துள்ளார். இதுபற்றி கோவிந்த் கூறுகையில், ‘உண்மை என்னவோ அனைத்தையும் நான் ஊடகங்களுடனும், போலீசாருடனும் பகிர்ந்து கொண்டேன். அதன் பிறகும், அவர்களுக்கு இன்னும் சந்தேகங்கள் இருந்தால், அவர்கள் விசாரணை நடத்தலாம். அந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நான் தனிப்பட்ட முறையில் அவர்களின் வீட்டிற்குச் சென்று, நிலைமையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். அவர்களின் வீட்டில் ஒரு பெரிய சோகம் நடந்துள்ளது. எனவே அவர்கள் நார்கோ சோதனை எங்கள் அனைவருக்கும் நடத்த வேண்டும் கோரினால், அது நிச்சயமாக நடத்தப்பட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். மேகாலயா போலீசார் இந்தூர் வந்தது எனக்கு தெரியும். அடுத்து என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. என்னிடம் வாக்குமூலம் வாங்க ஷில்லாங்கிற்கு என்னை அழைத்துள்ளனர் என்றார்.
The post மேகாலயா ஹனிமூன் கொலை மேலும் ஒருவர் சிக்குகிறார்: சோனம் 119 முறை செல்போனில் பேசியது கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.
