×

மேட்டுப்பாளையத்தில் தடையை மீறி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினர் 36 பேர் கைது

*போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் பாதிப்பு

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் தடையை மீறி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினர் 36 பேர் கைது செய்யப்பட்டனர்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-அன்னூர் நெடுஞ்சாலையில் 5 முக்கு சந்திப்பு அருகே கழிவு நீர் வெளியேறி வருகிறது. அதோடு துர்நாற்றம் வீசி வருகிறது.

இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் நடந்த கூட்டத்தில் அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி நேற்று நாசர் தலைமையில், நகர்மன்ற குழு தலைவர் முகமது சலீம் முன்னிலையில் கவுன்சிலர்கள் மற்றும் அதிமுகவினர் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் சிவம் தியேட்டர் அருகே அதிமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

உரிய அனுமதியின்றி போக்குவரத்து நிறைந்த சாலையில் கையில் தென்னங்கன்றுடன் நாற்று நடும் போராட்டத்திற்கு செல்ல முயன்றனர். அவர்களை மேட்டுப்பாளையம் டிஎஸ்பி (பொறுப்பு) பொன்னுச்சாமி, இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தடையை மீறி திடீரென சாலையின் நடுவே அமர்ந்து அதிமுகவினர் மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினர் 36 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் வாகனங்களில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.அதிமுகவினர் போராட்டத்திற்கு வருவதை அறிந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் அலி தலைமையிலான திமுகவினர் பஸ் நிலையம் அருகே குவிந்தனர்.

இதனால் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதிமுகவினரின் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

The post மேட்டுப்பாளையத்தில் தடையை மீறி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினர் 36 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : High Commissioner ,Highlands ,Traffic Jam ,Matuppalayam ,junction 5 ,Metuppalayam-Annur Highway, Gowai District ,
× RELATED கேரளாவுக்கு தமிழக தனியார் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் செல்லாது