×

பெகாசஸ் புயல்

இந்தியாவில் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் நாட்டின் முக்கிய தலைவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில், பெகாசஸ் உளவு விவகாரம் ஒன்றிய அரசுக்கு ஒருவித நெருக்கடியை உருவாக்கி வருகிறது. பெகாசஸ் என்பது இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு உளவு மென்பொருளாகும். இணைய தாக்குதலுக்கான உத்தியாக கருதப்படும் இந்த மென்பொருளை கொண்டு அலைபேசி தகவல்களை திருட முடியும்.இந்தியாவில் ராகுல்காந்தி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மனித உரிமை செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டன. ஆனால், இந்த சர்ச்சையை ஒன்றிய அரசு முற்றிலுமாக மறுத்தது. இந்திய உள்துறை அமைச்சகம் அந்நிறுவனத்திடம் இதுகுறித்து விளக்கமும் கேட்டது. இருப்பினும் 2017ம் ஆண்டு இந்திய – இஸ்ரேல் ஆயுத கொள்முதல் ஒப்பந்தத்தின் மைய பொருளாக பெகாசஸ் உளவு மென்பொருள் இருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம், அதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் பிரதமரின் இந்திய வருகை ஆகியவை இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர உறவு என்ற கோணத்தில் மட்டுமே பார்க்கப்படவில்லை. 2019ம் ஆண்டு ஐநா சமூக கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததும் சந்தேக கண்ணோடு பார்க்கப்பட்டது. இரு நாடுகளும் ரூ.15 ஆயிரம் கோடியில் நவீன ஆயுதங்களை வாங்க ஒப்பந்தம் செய்த கையோடு, பெகாசஸ் மென்பொருளையும் கைமாற்றியதாக பிரச்னைகள் எழுந்தன.அதிக பொருட்செலவில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை போன்றவற்றிற்காகப் பயன்படுத்தப்படும் மென்பொருளை அரசியல் கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், பிரபலங்களின் தொலைபேசி தகவல்களைச் சேகரிப்பது, ஒட்டுக் கேட்பது எனப் பயன்படுத்தியது யார் என அறிவிக்கக் கோரி மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த மென்பொருளை விலைக்கு வாங்கியதற்கான ஆதாரப்பூர்வ தகவல்கள் இல்லாவிட்டாலும், ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் ஒட்டுக் கேட்பிற்கு உதாரணமாகவே அமைந்தன. மோடி அரசு எதற்காக இந்த மென்பொருளை வாங்கியது என எதிர்க்கட்சிகள் மீண்டும் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றன. பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்கும் நிலையில், பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை. ஜனநாயக இந்தியாவில் அனைத்து குடிமக்களுக்கும் சில அடிப்படை உரிமைகள் உள்ளன. அவற்றை சிதைத்து, பிரபலங்களின் பேச்சை ஒட்டுகேட்டு, அவர்களை உளவு பார்ப்பது வேதனைக்குரியதாகும். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருந்தாலும் உண்மை நிலையை முழுமையாக வெளிகொணர்வதே நல்லது….

The post பெகாசஸ் புயல் appeared first on Dinakaran.

Tags : Pegasus Storm ,Pegasus ,India ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...