×

சைக்கிளை பஞ்சராக்கிய இலை கட்சியினரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘ஓரம் போ… ஓரம்போ ருக்குமணி வண்டி வருது… என்று பாடிக் கொண்டு வந்தார் பீட்டர் மாமா.‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கூட்டணியில் உள்ள தாமரை கட்சிக்காரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இலைக்கட்சி நிர்வாகிங்க பேசுறாங்களாம். ஆனால், சைக்கிள் கட்சிக்காரரையும், கட்சியையும் ஓரங்கட்டி வைச்சுட்டாங்களாம். இலை ஆட்சியை விமர்சனம் செய்யாத ஒரே கட்சி என்று அவர்களை அவங்களே மார்தட்டிக் கொள்வதாக இலை கட்சியினர் பேசிக்கிறாங்க. எங்க கூட்டணியில் இருக்கும் கட்சிகள், விரும்பும் வார்டுகள் குறித்து அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் பட்டியல் கொடுக்கலாம் என்று இலையின் தலைமை சொல்லி இருக்காம். இதை நம்பி மாங்கனி மாநகர சைக்கிள் கட்சிக்காரங்க, ஒரு பட்டியலோடு மாவட்ட செயலாளரை பார்த்தாங்களாம். பட்டியலை வாங்கி வைத்துக் கொண்ட மாவட்டம், நீங்க எலக்‌ஷன் வேலையை மட்டும் பாருங்க. வார்டெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் என்று கூலாக சொல்லிட்டாராம். ஏங்க, நாங்க தாமரை கட்சியை விட அதிக ஓட்டு வச்சிருக்கோம். பெரிய தலைவருங்க எல்லாம் மதிச்சு இடம் ஒதுக்கி குடுத்தாங்க.  ஆனா, இப்படி நீங்க சொன்னது நாங்க எதிர்பார்க்காத ஒண்ணுன்னு புலம்பி தள்ளிட்டாங்களாம்… ஓடாத சைக்கிள் இருந்து என்ன லாபம்.. இல்லாவிட்டால் என்ன லாபம்னு இலை கட்சியினர் சிரித்தபடியே சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கோர்த்த முத்துக்கள் எல்லாம் நூலில் இருந்து கழன்று நாலா பக்கமும் சிதறி ஓடுதாமே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குக்கர் கட்சியில் இருந்த முன்னாள் மாவட்ட செயலாளர்  ஒருவரும், மாஜி மேயர் ஒருவரும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட  நிலையில் மீண்டும் இலை கட்சிக்கு தாவிட்டாங்களாம். ஏற்கனவே கட்சிக்கு பெயர் வாங்கி தந்த நிலையில் இருந்த எஞ்சிய நிர்வாகிகளும் இலை கட்சியை நோக்கி நடையை கட்டியிருக்காங்க. இதனால் அல்வா, முத்து மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கு ஆட்களை தேடி நிர்வாகிகள் அலைய.. இவர்கள் வரும் தகவலை  கேள்விப்பட்டு பலரும் எஸ்கேப் ஆகும் காட்சிகள்தான் நடந்து வருதாம். ஆனால்  கட்சி தலைமையோ ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை.. வேட்பாளர் என்ற பெயரில் டம்மியாக ஒருவரையாவது நிற்க வைக்க வேண்டும் என்று மாநில தலைமை கட்டளை  போட்டுள்ளதாம். அதற்கு நிர்வாகிகள் சிலர், இந்த முறை டெபாசிட் தொகையை வேறு  உயர்த்திட்டாங்க… அதுக்கு கூட எங்களிடம் பணம் இல்லை, விட்டுடுங்க என்று  சொல்லி தப்பிக்க நினைக்கிறார்களாம்… இடையில் மாட்டி தவிப்பது என்னவோ  மாவட்ட நிர்வாகிகள் தானாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கரன்சிக்காக வரிசை கட்டி நிற்கும் இலைக்கட்சி நிர்வாகிகளை பத்தி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால, அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக வேட்பாளர்கள தேர்வு செய்யுற பணியில இறங்கிட்டாங்க. ஆனா கடந்த  10 ஆண்டு ஆட்சியில இருந்த இலைக்கட்சியினர் தேர்தல்ல போட்டியிட  அஞ்சுறாங்களாம். காரணம் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்ல திமுக  பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆனாலும், கட்சி தலைமை வற்புறுத்தல் காரணமாக பலர் வேண்டா  வெறுப்பா விருப்ப மனு அளிச்சுட்டாங்க. தற்போது எங்களுக்கு சீட் எல்லாம்  வேணாம். செலவு செய்யுறதுக்கு பணம் இல்லைனு கூறி ஓட்டம் பிடிக்க  தொடங்கிட்டாங்க. சிலர் கடைசி கட்டத்துல பணம் கிடைக்கும்னு மாவட்ட தலைவரின் பின்னால் வரிசை கட்டி நிற்கிறார்களாம்.மக்கள் மத்தியில தமிழக அரசுக்கு நல்ல பெயர் இருக்குறதால, எத வச்சு எதிர்த்து பிரசாரம் செய்யுறதுனு இலைக்கட்சியினர்  வெளிப்படையாவே சொல்றாங்க. இதனால பல  மாவட்டங்கள்ல இலைக்கட்சி மாவட்ட செயலாளர்கள் அதிர்ச்சியில் இருக்காங்க. கடந்த 10  வருஷத்துல பல கோடிகளை சம்பாதிச்சவங்க கூட இப்போ நம்ம இருக்குறத  காப்பாத்திக்கலாம்னு இலைக்கட்சி சார்பில் தேர்தல்ல போட்டியிட மறுத்து  ஒதுங்க ஆரம்பிச்சுடாங்களாம். மேலும் சில நிர்வாகிங்க கட்சி தலைமை செலவுக்கு  எவ்வளவு கரன்சியை வழங்கும்னு கேள்வி கேட்டுட்டு இருக்காங்க. கடன் வாங்கி  தேர்தல்ல நின்னா, தேர்தல் முடிவுக்கு அப்புறம் நம்ம நிலைமை படுமோசமாக  ஆகிடும்னு இலைக்கட்சியினரின் புலம்பல் சத்தம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்ல  சத்தமாக ஒலிக்குது…’’ என்றார் விக்கியானந்தா.‘‘பெரம்பூர்ல என்ன பிரச்சனை…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘பெரம்பூர் தொகுதியில் இலை கட்சியினர் மாவட்ட செயலாளருக்கு ஆதரவாக ஒரு அணியும் முன்னாள் அமைச்சருக்கு ஆதரவாக ஒரு அணியும் செயல்பட்டு வர்றாங்க. தற்போது முன்னாள் அமைச்சருக்கு ஆதரவாக செயல்படும் அணியினர் 3 பேர் தேனிகாரர் மூலமாக சீட்டுகளை வாங்க முயற்சி செய்யறாங்க. மற்றொருபுறம் மாவட்ட செயலாளர் தனது ஆதரவாளர்களை முன்மொழிந்து வருகிறாராம்.  இந்நிலையில் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 36வது வார்டில் ஏற்கனவே இலை கட்சியை சேர்ந்த ஒரு பகுதி செயலாளர் அந்த இடத்திற்கு மாவட்ட செயலாளரிடம் விண்ணப்பித்துள்ளாராம். இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பு வட்ட செயலாளராக பதவியேற்ற வெளி மாவட்டத்தில் இருந்து வந்த ஒருவர் தனக்குத் தான் அந்த சீட்டு என்கிறாராம். அந்த பகுதியில் செல்வாக்கு மிகுந்த பகுதி செயலாளரை பின்னுக்குத்தள்ளி பணத்தை செலவு செய்து சீட்டு வாங்கி விடலாம் என வட்ட செயலாளர் கணக்கு போட்டு வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நாட்டாமை கட்சியில் இருந்து புதிதாக வந்து சேர்ந்த ஒருவரும் குறிப்பிட்ட அந்த வார்டுக்கு  முயற்சி செய்வதாகவும் தெரியவந்துள்ளது…’’ என்றார் விக்கியானந்தா….

The post சைக்கிளை பஞ்சராக்கிய இலை கட்சியினரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Oram Bo... ,Orambo ,Rukumani ,Peter ,Urban Local Elections ,Yananda ,
× RELATED தீப்பிடித்து வீடு சேதம்...