×

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல்: கமல்ஹாசனும் அன்றைய தினம் மனு தாக்கல் செய்வார்

சென்னை: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 5 பேரும் 6ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். இதேபோல திமுக கூட்டணியில் போட்டியிடும் கமல்ஹாசனும் அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்கிறார். திமுக வேட்பாளர்கள் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த கமல்ஹாசன் ஆகிய 4 பேர் நேற்று காலை 11 மணிளவில் வேட்புனு தாக்கல் செய்வதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. ஆனால், தற்போது இந்த 4 பேரும் 6ம் தேதி (நாளை) வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

அன்றைய தினம் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். முன்னதாக, நேற்று காலை சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு அக்கட்சி எம்எல்ஏக்கள் வந்து, திமுக மற்றும் கூட்டணி சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் 4 வேட்பாளர்களை முன்மொழிவதாக கடிதம் வழங்கினார். ஒரு எம்பி வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். இதேபோல, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று காலை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை முன்மொழிவதாக எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கடிதம் வழங்கினர்.

இதையடுத்து அதிமுக மாநிலங்களவை எம்பி வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் நாளை (6ம் தேதி) சென்னை, தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். அப்ேபாது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னணி கட்சி தலைவர் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். ஒரே நாளில் தமிழகத்தில் இருந்து போட்டியிடும் மாநிலங்களவை வேட்பாளர்கள் போட்டியிட மனுதாக்கல் செய்கின்றனர். அதேநேரத்தில் சுயேச்சை வேட்பாளர்களை எம்எல்ஏக்கள் முன்மொழியாததால் அவர்களது மனு தள்ளுபடி செய்யப்படும். அரசியல் கட்சிகளின் சார்பில் முன்மொழியப்படும் மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 12ம் தேதி மாலை வெளியாகும்.

The post தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல்: கமல்ஹாசனும் அன்றைய தினம் மனு தாக்கல் செய்வார் appeared first on Dinakaran.

Tags : DMK ,AIADMK ,Rajya Sabha elections ,Tamil Nadu ,Kamal Haasan ,Chennai ,Wilson ,S.R. Sivalingam ,
× RELATED ஜன.1 முதல் டிசம்பர் 21 வரை குமரி கடல்...