×

ஆதிதிராவிட மகளிருக்கு அதிக முக்கியத்துவம் தச்சை மண்டலத்தின் தலையெழுத்தை மாற்றிய புதிய வார்டு வரையறை

நெல்லை : நெல்லை மாநகராட்சியில் செய்யப்பட்ட புதிய வார்டு வரையறைகள் காரணமாக தச்சை மண்டலத்தில் பெரும்பாலான வார்டுகள் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இம்மண்டலத்தில் மட்டுமே ஆதிதிராவிட மகளிருக்கு 3 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.நெல்லை மாநகராட்சியில் வார்டுகளின் எல்கைகள் சீரமைக்கப்பட்டதில் அதிக பாதிப்பை எதிர்கொண்டது தச்சை மண்டலமேயாகும். மறுசீரமைப்பில் தச்சை மண்டலத்தின் வார்டுகள் சகட்டு மேனிக்கு பிரிக்கப்பட்டுள்ளன. தச்சை மண்டலத்திற்கு உட்பட்டு 1,2,3,4,10,11,12,13,14,28,29,30 என மொத்தம் 12 வார்டுகள் வருகின்றன. இம்மண்டலத்தில் மொத்தம் 86 ஆயிரத்து 662 வாக்காளர்கள் உள்ளனர். நெல்லை மாநகராட்சியின் சிறிய மண்டலமாகவும், குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட மண்டலமாகவும் தச்சை மண்டலம் திகழ்கிறது.தச்சை மண்டலத்தில் அதிகபட்சமாக 29வது வார்டில் 9,401 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக 4வது வார்டில் 5,024 வாக்காளர்கள் உள்ளனர். இம்மண்டலத்திற்கு உட்பட்ட 4 மற்றும் 10, 14 வது வார்டுகள் எஸ்சி பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டுகளாகும். நெல்லை மாநகராட்சியில் எஸ்சி பெண்களுக்கு 4 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 3 வார்டுகள் தச்சை மண்டலத்தில் வருகின்றன. தச்சை மண்டலம் 4வது வார்டில் திருவண்ணநாதபுரம், திம்மராஜபுரத்தின் ஒரு சில தெருக்கள், படப்பக்குறிச்சி, கோட்டூர் ரோடு உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன. 10வது வார்டில் கொக்கிரகுளத்தின் இளங்கோவடிகள் தெரு உள்ளிட்ட சில தெருக்களும், வண்ணார்பேட்டை இளங்கோநகர், பரணிநகர், முருகன்குறிச்சியின் சில பகுதிகள், வெள்ளக்கோயில் உள்ள பகுதிகள் இடம் பெறுகின்றன. 14வது வார்டில் ஊருடையான்குடியிருப்பு, தேனீர்குளம், தச்சை வாலஜா பேட்டை உள்ளிட்ட பகுதிகள் இடம்பெறுகின்றன. தச்சை மண்டலத்தில் 3 எஸ்சி வார்டுகளிலும் பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலை இருக்க, 2,12,29 உள்ளிட்ட வார்டுகளில் பொது பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும். தச்சை மண்டலத்தில் 6 வார்டுகள் ஆண்களுக்கும், 6 வார்டுகள் பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.தச்சை மண்டலம் 1வது வார்டில் தெற்கு, வடக்கு சிதம்பரநகர், இந்தியா சிமென்ட் காலனி, கணபதிமில் காலனி, பால் கட்டளை, செல்வ விக்னேஷ் நகர், கோகுல்நகர், நல்மேய்ப்பர் நகர் உள்ளிட்ட பகுதிகள் இடம் பெறுகின்றன. 2வது வார்டில் சுந்தராபுரம், கரையிருப்பு, அழகனேரி, தாராபுரம், நியூகாலனி, மங்களாகுடியிருப்பு உள்ளிட்ட இடங்கள் அமைந்துள்ளன. 3வது வார்டில் சேந்திமங்கலம், மணிமூர்த்தீஸ்வரம், வடக்கு பாலபாக்கியாநகர், சிவந்திநகர், சுகர்மில்காலனி ஆகியவை காணப்படுகின்றன.தச்சை மண்டலத்தின் அனைத்து வார்டுகளும் துண்டாடப்பட்ட நிலையில், 11வது வார்டு (பழைய 9வது வார்டு) மட்டுமே உருக்குலையாமல் காட்சியளிக்கிறது. இவ்வார்டில் வண்ணார்பேட்டை, இந்திரா காலனி, சாலைத்தெரு, பைபாஸ் சாலை உள்ளிட்டவை அப்படியே இடம் பெற்றுள்ளன. 12வது வார்டில் சிந்துபூந்துறை செல்விநகர், மதுரை ரோடு, உடையார்பட்டி, திலக்நகர், மேகலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகள் காணப்படுகின்றன. 13வது வார்டில் அழகநேரி பிராயன்குளம், கீழக்கரை, மேலக்கரை, மதகடி பச்சேரி, தேனீர்குளம், தளவாய்புரம், மாவடி குளத்தாங்கரை உள்ளிட்டவை காணப்படுகின்றன.தச்சை மண்டலம் 28வது வார்டில் டவுன் பாரதியார் தெரு, முத்துராமலிங்கபுரம், மணிபுரம், வையாபுரிநகர், காவல்பிறை தெரு, சுந்தரர் தெரு உள்ளிட்ட பகுதிகள் இடம் பெறுகின்றன. 29வது வார்டில் மீனாட்சிபுரம், ரயில்வே காலனி, பாபுஜி ஜெகஜீவன்ராம் காலனி, ரயில்வே குட்ஷெட் காலனி, வீரராகவபுரம் காலனி, குறுக்குத்துறை ரதவீதிகள், லட்சுமிபுரம், சி.என்.கிராமம் ஆகியவை உள்ளன. 30வது வார்டில் நெல்லை சந்திப்பு, கைலாசபுரம், சன்னியாசி கிராமம், சிவபுரம், கணேசபுரம் உள்ளிட்ட இடங்கள் உள்ளன.தச்சை மண்டலத்தில் முன்பு இருந்த பாறையடி, கோட்டையடி, இலந்தகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் (பழைய 54, 55வது வார்டுகள்) இப்போது நெல்லை மண்டலத்திற்கு சென்றுவிட்டன. ஆனால் அதற்கு பதிலாக டவுன் பாரதியார் தெரு, மணிபுரம், வையாபுரி நகர், பூதத்தார் சன்னதியை உள்ளடக்கிய 28வது வார்டு நெல்லை மண்டலத்தில் இருந்து தச்சை மண்டலத்திற்கு கைமாறியுள்ளது. மேலும் பாளை மண்டலத்தில் இருந்து ஒரு வார்டும் தச்சை மண்டலத்திற்கு கிடைத்துள்ளது.முதலும், முடிவிலும் கடும் போட்டிநெல்லை மாநகராட்சியில் முதலும், முடிவுமாக உள்ள வார்டுகளுக்கு அதிக போட்டி காணப்படுகிறது. முதல் வார்டான ஒன்றாவது வார்டிலும், இறுதி வார்டான 55வது வார்டிலும் போட்டியிட விஐபிக்கள் பலரும் முண்டியடிக்கின்றனர். பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் இவ்வார்டுகளில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிக அக்கறை காட்டுகின்றன. தச்சை மண்டலத்தில் விஐபி அந்தஸ்துமிக்க 1வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? யார்? என்பது குறித்த ஹேஷ்யங்கள் அரசியல் வட்டாரத்தில் அதிகம் எழுந்த வண்ணம் உள்ளது. சுயேச்சைகளும் கூட இவ்வார்டை சுற்றி கொண்டு தேனீக்களாக உலா வருகின்றனர். சந்தடிசாக்கில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஒன்றும் கூட, 1வது வார்டை கேட்டு ஒற்றை காலில் தவமிருப்பது சுவாரசியத்திற்கு உரியது….

The post ஆதிதிராவிட மகளிருக்கு அதிக முக்கியத்துவம் தச்சை மண்டலத்தின் தலையெழுத்தை மாற்றிய புதிய வார்டு வரையறை appeared first on Dinakaran.

Tags : Aditravanadi ,Paddy ,Carpenter Zone ,Paddy Corporation ,Dinakaran ,
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...