×

சென்னையில் மின்சார பேருந்துகள் சேவையை ஜூன் 3ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னையில் மின்சார பேருந்துகள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 3ம் தேதி தொடங்கி வைக்கிறார். சென்னை பயணியர் தேவையை போக்கும் வகையில் 1,100 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்தது. முதற்கட்டமாக, 2023ம் ஆண்டு ஜெர்மன் வங்கியின் நிதி உதவியுடன் 500 மின்சார பேருந்துகள் வாங்க டெண்டர் வெளியிடப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மேலும் 600 மின்சார தாழ்தள பேருந்துகளுக்கான டெண்டர் விடப்பட்டது. அசோக் லைலேண்டு துணை நிறுவனமான, ஓ.எச்.எம்.குளோபல் மொபிலிடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பேருந்து தயாரிப்பு தொடங்கியது. முதல் கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ள மின்சார பேருந்துகள், பெரும்பாக்கம் மற்றும் பல்லவன் இல்லம் அருகே உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய மின்சார பேருந்துகளில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக சிசிடிவி கேமரா, கூடுதல் இருக்கைகள், இருக்கையின் கீழே தொலைபேசிகளுக்கு சார்ஜர் போடும் வசதியென புதிய வசதிகள் இந்த மின்சார பேருந்துகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மின்சாரப் பேருந்து இயக்கத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதோடு பெரும்பாக்கம் பல்லவன் இல்லம் வியாசர்பாடி உள்ளிட்ட ஐந்து பேருந்து பணிமனைகளில் மின்சாரப் பேருந்துகளுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் ஜூன் 3ம் தேதி இந்த புதிய மின்சார பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025ம் ஆண்டு இறுதிக்குள், சென்னை முழுவதும் மொத்தமாக 625 மின்சார பேருந்துகள் இயங்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக 120 மின்சார பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட உள்ளது. பின்னர், மதுரை, கோவை போன்ற நகரங்களுக்கு 12 மீட்டர் நீளமுடைய தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல்கட்டமாக முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி மின்சார தாழ்தள பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

The post சென்னையில் மின்சார பேருந்துகள் சேவையை ஜூன் 3ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Chennai ,K. Stalin ,Municipal Transport Corporation ,Chief Minister MLA ,
× RELATED தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு